ஆபரேஷன் சிந்தூரை கிரிக்கெட் கூட முடிச்சு போடுவீங்களா பிரதமரே.. காங்கிரஸ் காரசார பதிலடி
டெல்லி: ஆசியக் கோப்பையை வென்ற இந்தியாவை வாழ்த்திய பிரதமர் மோடி, மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடந்தது என்பது போல ட்வீட் செய்திருந்தார். இதற்கிடையே ஆசியக் கோப்பை வெற்றியை 'ஆபரேஷன் சிந்துார்' உடன் தொடர்புப்படுத்தியதற்குப் பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடக்கிறது என்றால் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது
நேற்று நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். இதற்கிடையே கோப்பையை வென்ற இந்திய அணிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதன்படி பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர்
இது தொடர்பாக மோடி தனது ட்விட்டரில், "விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்துார். விளைவு ஒன்றே - இந்தியா வெற்றி பெறுகிறது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே விளையாட்டுப் போட்டியையும் ஆபரேஷன் சிந்தூரையும் தொடர்புப்படுத்தி, பிரதமர் மோடி போட்ட இந்த ட்வீட்டை காங்கிரஸ் கடுமையாகக் கண்டித்துள்ளது.
விளையாடியது ஏன்
இது தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் அதுல் லோந்தே பாட்டீல், "பிரதமர் மோடிக்கு வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜதந்திரம் குறித்து ஏதேனும் புரிதல் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. கிரிக்கெட்டில் விளையாடுகிறோம் என முடிவெடுத்தால் விளையாட்டு உணர்வுடன் விளையாடியிருக்க வேண்டும்.
'ஆபரேஷன் சிந்துார்' நடந்து கொண்டிருந்தால், இந்தியா விளையாடியிருக்கக் கூடாது. அதேநேரம் நிலைமையைச் சரி செய்யப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தால் விளையாட்டு என்பது அதற்கு ஒரு டூலாக இருக்கலாம். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அனைத்தையும் 'ஆபரேஷன் சிந்துார்' உடன் இணைப்பது சரியல்ல" என்றார்.
எல்லாவற்றிலும் அரசியல்
அதேபோல மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சாக்பாலும், பிரதமரின் ட்வீட்டிற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக ஹர்வர்தன், "அவரது ட்வீட்டை பாருங்கள்.. நிலம், நீர், காற்று அல்லது விளையாட்டு என எதுவாக இருந்தாலும், அனைத்திலும் அரசியலைக் கொண்டுவந்து பிளவுகளை ஏற்படுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவின் வெற்றியை நினைத்தால் எங்களுக்கும் பெருமையாக இருக்கிறது. ஆனால் ஆசியக் கோப்பையை நாங்கள் வெல்வது இது முதல்முறை இல்லை. நமது நாட்டிற்கு என ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை அவர் காப்பாற்றுவதில்லை என்பதே எங்களுக்கு வருத்தமளிக்கிறது" என்று சாக்பால் மேலும் தெரிவித்தார்.
இறுதி போட்டி
நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 147 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்கத்தில் இந்தியா தடுமாறினாலும் அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக திலக் வர்மா 69 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சஞ்சு சாம்சன் மற்றும் சிவம் தூபே ஆகியோரின் பேட்டிங்கும் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதேநேரம் போட்டி முடிந்த பிறகு நடந்த ஒரு சம்பவமும் கவனம் ஈர்ப்பதாக இருந்தது. அதாவது ஆசிய கிரிக்கெட் கவன்சில் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஆவார். இருப்பினும், அவரிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications