உச்சநீதிமன்றம் அவ்வளவு சொல்லியும் கேட்கலையே! சொதப்பிய மத்திய அரசு.. நீதிமன்றம் போன CJP ஆதரவாளர்கள்!
டெல்லி: இன்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தை தடுக்க, ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும்.. மத்திய அரசு அதை கேட்கவில்லை. எனவே CJP ஆதரவாளர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருக்கின்றனர்.
மொத்த போக்குவரத்தையும் முடக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அதை கேட்காமல் அனைத்து மெட்ரோ ரயில் நிலைங்களையும் மூடியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளர் கோவிந்த் மோகன் (IAS), டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் (IPS) மற்றும் DMRC தலைவர் டி. தாரா (IAS) ஆகியோருக்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
போராட்டம் காரணமாக டெல்லிக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ரயிலை மடக்கி, அதில் பயணித்து வந்த போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல டெல்லி முழுவதும் 50க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து நேற்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவை கொடுத்திருந்தது. போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. குறிப்பாக போராட்டக்காரர்களுடன் சமூக விரோத அல்லது தேச விரோத சக்திகள் ஊடுருவ கூடும் என்று அச்சம் இருந்தால்.. அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முழு உரிமை உண்டு. ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. பிற பாதுகாப்பு வழிமுறைகளையும் அரசு பயன்படுத்தலாம்.
ஆனால், சாதாரண பொது மக்களுக்கு, பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் ரயில் நிலையங்களை அணுகவும் உரிமை உள்ளது என்று தலைமை நீதிபதி சூரிய காந்த் தெளிவாக கூறியிருக்கிறார்.
டெல்லியில் மூடப்பட உள்ள சாலைகள் சாலைகளை மறு ஆய்வு செய்யக்கோரிய தலைமை நீதிபதி, போக்குவரத்து தடைகள் இருக்கும் இடங்களில் பயணிகளுக்கு மாற்றுப்பாதைகள் குறித்து முன்கூட்டியே தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இன்றும் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு என்றும், தேவையற்ற வகையில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தவறியதால் டெல்லியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
