இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா.. 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. கேரள மாநிலம் தொடர்ந்து முதலிடம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில், அங்கு முகக்கவசம் அணிவது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் கொரோனோ பெருந்தொற்று பரவத் தொடங்கி நாட்டையே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு உலக்கியது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

இது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 3,961 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மமி நேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளத்தில் தலா ஒருவர் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே இணை நோய்கள் இருந்ததால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 1,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் 506, டெல்லியில் 483, குஜராத்தில் 338, மேற்கு வங்கத்தில் 331, கர்நாடகாவில் 253, தமிழ்நாட்டில் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தினந்தோறும் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படுக்கை வசதிகள், காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒமைக்ரான் ஜேஎன்-இன் மாறுபாடான எல்எஃப்7 என்ற வகையான உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருகிறது. இது வீரியம் இல்லாத கொரோனா தொற்று என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
முதியவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, பயணங்களின் போது முகக்ககவசம் அணிய வேண்டும். அதேபோல, மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications