அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் 4,302 பேருக்குபாதிப்பு.. 7 பேர் பலி.. தமிழகத்திலும் பரவுகிறதா?
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரனோ பெருந்தொற்று 2019 ஆம் ஆண்டு முதல் சுமார் 3 ஆண்டுகளுக்கு நாட்டையே நிலைகுலையச் செய்தது. லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வந்தது. தற்போது இந்தியாவிலும் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கேரள மாநிலம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலத்தில் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும், தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேரும், டெல்லி, தமிழகம் மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்து 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 76 வயது முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்: முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை. மத்திய அரசு கூறிய அறிவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம் என்றார்.
கேரள மாநிலத்தில் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா பரவலில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் தினந்தோறும் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படுக்கை வசதிகள், காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஒமைக்ரான் ஜேஎன்-இன் மாறுபாடான எல்எஃப்7 என்ற வகையான உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருகிறது. இது வீரியம் இல்லாத கொரோனா தொற்று என்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, பயணங்களின் போது முகக்ககவசம் அணிய வேண்டும். அதேபோல, மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications