கவுன்சிலர் டூ முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா.. டெல்லியின் புதிய முதல்வர் குறித்து ஆச்சரியமான தகவல்
டெல்லி: பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா டெல்லியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை (பிப்ரவரி 20) அன்று டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்க உள்ளார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்த ரேகா குப்தா, டெல்லி மாநில பாஜகவின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். அடிமட்ட தொண்டராக இருந்து அரசியலில் இருந்து வந்த ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. யார் எந்த ரேகா குப்தா என்பதை பார்ப்போம்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயன்ற ஆம் ஆத்மி கட்சி தோல்வியை தழுவியுள்ளது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களை பாஜக வென்றுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்தது வென்ற பாஜக, தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறது.

முன்னதாக புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா தான் முதல்வர் ஆக வாய்ப்புஇருப்பதாக கருதப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அவரது பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியின் ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 51 வயதாகும் ரேகா குப்தா அடிமட்ட தொண்டராக பாஜகவில் அரசியலை தொடங்கியவர். திறமையாக பணியாற்றியால் இன்று முதல்வராக உயர்ந்துள்ளார் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUDU) முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். பாஜகவின் டெல்லி மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

ரேகா குப்தா, 1996-1997 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 2007 ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சியில் உள்ள உத்தரி பிடம்புரா (வார்டு 54) இல் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2012 ஆம் ஆண்டில் உத்தரி பிடம்புராவில் (வார்டு 54) இருந்து கவுன்சிலர் ஆனார். கவுன்சிலராக இருந்தவர், டெல்லியின் ஷாலிமார் பாக் தொகுதியில் முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இன்று முதல்முறையாக எம்எல்ஏவாக இருந்த போதும் டெல்லி முதல்வராகி உள்ளார்.
பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்கும் விழா, வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.. இந்த பதவியேற்பு நிகழ்விற்காக நகரின் மத்திய, வடக்கு மற்றும் புது டெல்லி பகுதிகளில் 25,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.













Click it and Unblock the Notifications