தாமதமாக வந்த ரயில்.. டெல்லிக்கே தனது குரலை கேட்க வைத்த பயணி.. ரயில்வே தரப்போகும் நல்ல தொகை
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து ஒடிசாவின் சம்பல்பூருக்குப் பயணம் செய்தபோது ரயில் 8 மணி நேரம் 48 நிமிடங்கள் தாமதமானதால் ஏற்பட்ட சிரமத்திற்காக, ஒரு பயணிக்கு ₹30,000 இழப்பீடு வழங்கிட ஜார்க்கண்ட் மாநில மாவட்ட நுகர்வோர் ஆணையம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்தத் தாமதம் கட்டுக்கடங்காத காரணங்களால் தான் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க ரயில்வே துறை தவறிவிட்டதாகக் கூறிய நுகர்வோர் நீதிமன்றம், அவருக்கு வழக்குச் செலவாக ₹5,000 கூடுலாக வழங்கவும் தீர்ப்பளித்துள்ளது. இந்த உத்தரவு கடந்த செப்டம்பர் 2ம்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் குமார் என்பவர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அன்று டாடாநகரிலிருந்து சம்பல்பூருக்குப் பயணம் செய்வதற்காக 'இஸ்பாத் எக்ஸ்பிரஸ்' ரயிலில் இரண்டு 'ஸ்லீப்பர் கிளாஸ்' டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார். இந்த ரயில் டாடாநகரிலிருந்து காலை 10.18 மணிக்குக் கிளம்பி, மாலை 3.50 மணிக்குச் சம்பல்பூரைச் சென்றடைய திட்டமிட்டிருந்தார்.

ஆனால், இந்த ரயில் தாமதமாகப் புறப்பட்டு, திட்டமிடப்பட்ட நேரத்தை விட 528 நிமிடங்கள் (8 மணி நேரம் 48 நிமிடங்கள்) தாமதமாகச் சம்பல்பூரைச் சென்றடைந்திருக்கிறது. இந்தத் தாமதத்தினால் தான் சந்தித்த உடல், மன மற்றும் நிதி ரீதியான அலைச்சல்களுக்காக சஞ்சய் குமார் ₹4.5 லட்சம் இழப்பீடு கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது புகாருக்கு ஆதாரமாகத் தனது பயணச் சீட்டு மற்றும் ரயில்வே துறைக்கு அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ் ஆகியவற்றை நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
எனினும், ரயில்வே துறை இந்தப் புகாரை மறுத்ததுடன், இந்த விவகாரம் 'ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயச் சட்டத்தின் கீழ் வருவதால், இதை விசாரிக்க நுகர்வோர் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டது. மேலும், ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் கரக்பூர் கோட்டத்தை இந்த வழக்கில் ஒரு தரப்பாகச் சேர்க்கவில்லை என்றும் ரயில்வே வாதிட்டது.
மேலும், சஞ்சய் குமார் தேவையான நோட்டீஸ் நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றும், தாமதத்தினால் ஏற்பட்ட நிதி இழப்பு அல்லது பாதிப்பிற்கான வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறிய ரயில்வே துறை, சேவையில் எந்தக் குறைபாடும் இல்லை என்று திட்டவிட்டமாக மறுத்தது.
ரயில்வே துறை பொறுப்பேற்க வேண்டும்
ஆனால் நுகர்வோர் நீதிமன்றத்தின் தலைவர் சுனில் குமார் சிங் மற்றும் உறுப்பினர்கள் பிரதீப் குமார் மிஸ்ரா, சஞ்சு ஷாஹி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்த போது, முதலில் தனது அதிகார வரம்பு குறித்த எதிர்ப்பை தான் விசாரித்தது. ரயில் தாமதங்களுக்கான இழப்பீடு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, சஞ்சய் குமாரின் புகாரை விசாரிக்க நுகர்வோர் ஆணையத்திற்கு முழு அதிகாரம் உண்டு என்று விளக்கம் அளித்தது.
ரயில் தாமதமானது தங்களது கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் தான் ஏற்பட்டது என்பதை ரயில்வே துறையால் நிரூபிக்க முடியவில்லை என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், இந்த வழக்கை விசாரிக்க இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.
இந்த வழக்கில், நீதிமன்றம் கூறுகையில், "ரயிலின் தாமதம் தங்களது கட்டுப்பாட்டை மீறி நடந்தது என்பதை ரயில்வே நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, ரயில் தாமதம் குறித்த புகார்தாரரின் கோரிக்கையில் அதிக நியாயம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். தாமதத்தினால் தான் பாதிக்கப்பட்டதை சஞ்சய் குமார் நிரூபித்துள்ளாரா என்பதை இந்த ஆணையம் பரிசீலித்தது. இதற்காக அவர் தாக்கல் செய்த பயணச் சீட்டு மற்றும் பிற ஆவணங்களை ஆணையம் விசாரித்தோம். மேலே விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், எதிர்மனுதாரர்களின் ரயில் தாமதத்தால் புகார்தாரர் உடல், மன மற்றும் நிதி ரீதியான அலைச்சலுக்கு ஆளானார் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார் என்பதில் நாங்கள் உறுதியான முடிவுக்கு வருகிறோம். அதன்படி, சேவைக் குறைபாட்டிற்காக எதிர்மனுதாரர்களிடமிருந்து இழப்பீடு பெற புகார்தாரருக்கு உரிமை உண்டு.
ஒவ்வொரு பயணியின் நேரமும் மிகவும் விலையானது என்பதை மறுக்க முடியாது. தாமதத்திற்கான காரணம் விளக்கப்பட்டு, அது தங்களது கட்டுப்பாட்டை மீறி நடந்தது என்றும், அதற்கான சரியான நியாயம் உள்ளது என்றும் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்படும் வரை ரயில்வே பொறுப்பிலிருந்து தப்ப முடியாது.
எனவே சஞ்சய் குமாருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான இழப்பீடாக ₹30,000 மற்றும் வழக்குச் செலவாக ₹5,000 ஆகியவற்றை ரயில்வே வழங்க வேண்டும். இந்தத் தொகையை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அந்த அதற்குள் செலுத்தப்படாவிட்டால், உத்தரவு தேதியிலிருந்து நிலுவைத் தொகை முழுமையாகச் செலுத்தப்படும் வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் தொகையைச் செலுத்த வேண்டும்" இவ்வாறு நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.'


Click it and Unblock the Notifications
