இந்தியாவில் கொரோனாவால் 2.57லட்சம் பேர் பாதிப்பு 4,194 பேர் மரணம்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 2,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,57,630 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரியும் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,57,630 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொது பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கை கொடுத்த லாக்டவுன்
நாட்டின் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 2,57,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவின் பிடியில் சிக்கியவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 2,62,89,290 பேராக உயர்ந்துள்ளது.

3,57,630 பேர் மீண்டனர்
ஒரே நாளில் 3,57,630 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2,30,70,365 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 29,23,400 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2,95,525 பேர் மரணம்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 4,194 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,95,525 பேராக அதிகரித்துள்ளது. நோயினால் உயிரிழப்பு அதிகரிப்பது தொடர்ந்து வருகிறது.

19,33,72,819 தடுப்பூசி
கொரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மே 21ஆம் தேதி வரை 19,33,72,819 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications