கொரோனா என்பது கடவுளின் செயல்.. ஜிஎஸ்டியில் வருவாயில் பெரிய சரிவு.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!
டெல்லி: கொரோனா என்பது கடவுளின் செயல், ஜிஎஸ்டி வருவாயில் கொரோனா காரணமாக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு வழங்கியது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்த இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொருளாதார சரிவு காரணமாக மாநில அரசுகள் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு இருக்கிறது .

இந்த நிலையில் மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் நிதி அமைச்சர்கள் உடன் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்தார். மாநில அரசுகளின் வருவாய் இழப்பு குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இன்று நடந்த ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், கொரோனா என்பது கடவுளின் செயல், ஜிஎஸ்டி வருவாயில் கொரோனா காரணமாக பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
2.35 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக எதிர்பார்க்காத முறையில் ஜிஎஸ்டி சரிந்துள்ளது. இந்த வருடம் மிக மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளோம்.
மத்திய அரசு 1.65 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கும் 13806 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாய் குறித்து மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.
பஞ்சாப்பிற்கு மட்டும் 25 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி வருவாய் குறித்து மாநில அரசுகள் உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதற்கு பல்வேறு மாநில காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் மாநிலத்திற்கு பங்கும் , இழப்பீடும் வழங்குவது மத்திய அரசின் கடமை. ஆனால் இது எதோ தங்கள் கடமை இல்லை என்பதை போல, மத்திய அரசு செயல்படுகிறது.
மத்திய அரசின் இந்த செயலால் மாநில அரசுகள், முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்கள் மீது அதிக பாகுபாடு காட்டப்படுகிறது என்று பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றஞ்சாட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications