இவர்களுக்கு எல்லாம் 2 டோஸ் சுத்தமாக போதாது.. 3ஆவதாக பூஸ்டர் டோஸ் கண்டிப்பாக தேவை.. ஷாக் தரும் ஆய்வு
டெல்லி: கொரோனா வேக்சின் தடுப்பாற்றல் 4 முதல் 6 மாதங்களில் குறையத் தொடங்குவதாகவும் இதனால் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது கொரோனா வைரஸ் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலக வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே தடுப்பூசிக்கு எதிரான ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

பூஸ்டர் டோஸ்
அதிலும் ஐரோப்பிய நாடுகள் 2 டோஸ் வேக்சின்களை போட்டு முடித்து விட்டு, தற்போது பூஸ்டர் டோஸ் போடும் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் 2 டோஸ் வேக்சின் போடும் வரை பூஸ்டர் டோஸ் குறித்துச் சிந்திக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம் முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட்டால் மட்டுமே தடுப்பாற்றல் நீடிக்கும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

6 மாதங்கள்
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் தடுப்பாற்றல் குறித்து பைசர் நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தடுப்பூசி போட்ட சில மாதங்களில் வேக்சின் தடுப்பாற்றல் குறையத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு தடுப்பாற்றல் விரைவாகக் குறையத் தொடங்குவது அதில் தெரியவந்துள்ளது. அதாவது தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து அடுத்த 6 மாதங்களில் வேக்சின் தடுப்பாற்றல் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைவது அதில் தெரிய வந்துள்ளது.

யாருக்குக் குறைகிறது
தடுப்பூசி போட்டவர்களில் இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்களுக்கு வேக்சின் தடுப்பாற்றல் அதிகளவில் குறைந்துள்ளது. அதேபோல பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு வேக்சின் தடுப்பாற்றல் விரைவாகக் குறைவதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வேக்சின் தடுப்பாற்றல் குறையத் தொடங்குவதால், ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்
உலகின் பல்வேறு இடங்களிலும் வேக்சின் போட்ட பிறகும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகச் செய்திகள் வெளியாகி நாம் பார்த்திருப்போம். கொரோனா வேக்சின் தடுப்பாற்றல் குறைவதாலேயே இது போல வைரஸ் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியவுடன் கொரோனா பாதிப்பு சில காலம் குறைந்தது. இருப்பினும், அது சில மாதங்களிலேயே அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக இஸ்ரேல் தனது நாட்டிலுள்ள அனைவருக்கும் 3ஆவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்?
பைசர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் தடுப்பாற்றல் முதல் மாதம் 77.5%ஆக உள்ளது. அதன் பிறகு அது ஐந்து முதல் ஏழு மாதங்களில் 20% ஆகக் குறைகிறது. இப்படி வேக்சின் தடுப்பாற்றல் குறைவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தலாம். அதேநேரம் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை கொரோனா வேக்சின் 2 டோஸ் தொடர்ந்து தடுப்பதாகவே ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தற்போது வரை நடத்தப்பட்ட 2 ஆய்வுகளும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேக்சின் தடுப்பாற்றல் குறைவதாகவே கூறுகிறது. அதேநேரம் நமது செல்களில் தடுப்பாற்றலை உற்பத்தி செய்யும் முறையைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் என்பதால், தற்போதைய சூழலில் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் என்பது தேவையில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications