கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடே இல்லை... கோமா நிலையில் இருந்து வெளியே வராத காங். - பிரதமர் மோடி
டெல்லி: நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை; ஆனால் காங்கிரஸ் கட்சிதான் பொய்யான தகவல்களைப் பரப்புகிறது என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுவரை சுமார் 41 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்கிற புகாரும் உள்ளது. இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தும் வருகிறது.

பாஜக எம்.பிக்கள் கூட்டம்
இந்த நிலையில் டெல்லியில் இன்று பா.ஜ.க. எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் தட்டுப்பாடுகள் இல்லாமல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

பொய் பரப்பும் காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் புதிய மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்க விடாமல் எதிர்க்கட்சிகள் தடுக்கின்றனர். தலித்துகள், பழங்குடிகள், பெண்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

கோமாவில் இருந்தும மீளாத காங்.
இதனை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. 60 ஆண்டுகாலமாக நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் இன்னமும் கோமா நிலையில் இருந்து வெளியே வரவில்லை. காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து எங்களை தேர்ந்தெடுத்துவிட்டனர். இதனை காங்கிரஸால் ஏற்கமுடியவில்லை. நாட்டின் பல மாநில தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. அதனைப் பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்பட வேண்டும்.

கொரோனா- அரசியலாக்காதீங்க...
கொரோனா விவகாரம் என்பது அரசியலாக்கப்பட வேண்டியது அல்ல. இது ஒரு மனிதாபிமானம் சார்ந்த பிரச்சனை. இந்த கொரோனா காலத்தில் நாட்டில் ஒருவர் கூட பட்டினி கிடக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. டெல்லியில் இப்போது வரை 20% முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

கொரோனா 3-வது அலை
காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் துரதிருஷ்டவசமானது. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அனைவரும் களப்பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications