விவசாயிகளின் போராட்டத்தை நினைவுகூரும் விதமாக.. டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வந்த சிபிஎம் எம்பி!
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் போது, நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் சிபிஎம் எம்பி அமரா ராம், டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இருப்பினும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறது. இதனையடுத்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிருக்கிறார். பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய தனதா தளமும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

அதேபோல எதிர் வரிசையில் இந்தியா கூட்டணி, இந்த தேர்தலில் 234 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் மட்டும் தனியாக 99 இடங்களை வெற்றி பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 2 மடங்கு அதிகமாகும். இந்தியா கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூன்ஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (சிபிஐ எம்-எல்) ஆகிய இடதுசாரி கட்சிகள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் சிலர் இன்று லோக்சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து எம்பியாக பதவியேற்றுக்கொண்ட சிபிஎம் எம்பி அமரா ராம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும் என்றும், ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல், ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது என இந்த மூன்று வேளாண் சட்டங்களை கடந்த 2020ம் ஆண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருந்தது.
இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. மூன்று சட்டத்தில், மூன்றாவது சட்டம் மண்டி முறையை ஒழித்துக் கட்டுவதாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. நாடு முழுவதும் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனர். பொறுத்து பொறுத்து பார்த்த விவசாயிகள் ஒரு கட்டத்தில், நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணியை அறிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கு வரும் வழிகளை முற்றிலுமாக அடைத்தது. ஏராளமான தடுப்புகள் உருவாக்கப்பட்டன. எனவே விவசாயிகளால் இந்த போராட்டத்தை நடத்த முடியவில்லை.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் லோக்சபா தொகுதியின் சிபிஎம் எம்பி அமரா ராம் இன்று டிராக்டரில் வந்து விவசாயிகளின் போராட்டத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். ஏற்கெனவே லோக்சபா தற்காலிக துணை சபாநாயகர் பொறுப்பு விவகாரத்தில் காங்கிரஸ், திமுக எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக இன்று சம்பவம் செய்திருந்தனர். மட்டுமல்லாது இந்தியா கூட்டணி எம்பிக்கள் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தியவாறு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சிபிஎம் எம்பி அமரா ராம் டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு வந்த சம்பவம் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications