கஜா புயல் நிவாரணத்திற்கே பதில் தெரியல.. ஃபானி புயலுக்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகை
டெல்லி: ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 மாநிலங்களுக்கு உதவித் தொகையை விடுவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எதிரொலியாக தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறி நாளை மாலை ஒடிசா கடற்பகுதியை ஃபானி நெருங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.309.75 கோடி முன் உதவித் தொகையை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு ரூ.340 கோடி முன் உதவித் தொகையும், ஆந்திராவுக்கு ரூ.. 200.25 கோடி மற்றும் மேற்கு வங்கத்திற்கு 235.50 கோடி ஒதுக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 16 ம் தேதி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்டது. இதில், பல ஆயிரம் தென்னை, மா மரங்கள் போன்ற விவசாய பயிர்கள் நாசமாகின. வீடு, தொழில் கூடங்களை பலர் இழந்தனர். இதனையடுத்து, கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு 1, 500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.
இதனையடுத்து, டிசம்பர் மாத இறுதியில், தமிழகத்துக்கு 1,146 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இதனால், நிவாரணத் தொகை முழுமையாக கிடைக்காமல் பலரும் தவிப்புக்கு உள்ளாகினர். இதனால், இன்னும் முழுமையாக மீளாத நிலையில் டெல்டா மாவட்டங்கள் உள்ளன.
இந்தநிலையில், தமிழக டெல்டா பகுதிகளை தாக்கிய கஜா புயலுக்கே இன்னும் முழு நிவாரண உதவி கிடைக்காத நிலையில், ஃபானி புயல் கரையை கடக்கும் முன்பே உதவித் தொகையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications