இடஒதுக்கீடு குறித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு! தலித், பழங்குடி அமைப்புகள் இன்று நாடு தழுவிய பந்த்
டெல்லி: உச்சநீதிமன்றம் சமீபத்தில் உள் இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பளித்திருந்தது. அதில், பொருளாதாரத்தில் முன்னேறிய எஸ்சி, எஸ்டி பிரிவினரை உள்ஒதுக்கீட்டில் இருந்து நீக்க மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் மற்றும் பழங்குடி அமைப்பினர் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதேபோல, பஞ்சாப் மாநில அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி, மஜாபி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது. இந்த இரண்டு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்இடஒதுக்கீடு தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. அதாவது இந்த வழக்கு மீது விரிவான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று கூறியிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், மனோஜ் மிஸ்ரா, விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர மிஸ்ரா, பெலா எம்.திரிவேதி ஆகிய 7 பேர் அடங்கிய அமர்வு கையில் எடுத்தது.
இப்படியாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த 1ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில்,
“கல்வி, வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினருக்கான (எஸ்டி) இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனினும், உரிய ஆய்வுகளுக்கு பிறகே உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். துல்லியமான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமே உள்ஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம், பஞ்சாப் அரசின் உள்ஒதுக்கீடு சட்டம் செல்லும்” என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கிய 6 நீதிபதிகளில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சுபாஷ் சந்திர சர்மா ஆகிய 4 நீதிபதிகள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது எஸ்சி, எஸ்டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும். முதல் தலைமுறையினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். முதல் தலைமுறை உயர்ந்த நிலையை எட்டிவிட்டால், 2-ம் தலைமுறைக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது. தற்போது ஓபிசி பிரிவினருக்கு மட்டுமே கிரீமிலேயர் நடைமுறை அமலில் உள்ளது. இதே நடைமுறையை எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் அமல்படுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி பிரிவில் பொருளாதாரத்தில் முன்னேறியவா்களை உள்ஒதுக்கீட்டில் இருந்து நீக்க மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதுதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட வாய்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து இப்போது வரை அவர் எட்டியுள்ள உயரம் போதுமானதாக இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
எனவே தலித் மற்றும் பழங்குடி அமைப்பினர் இன்று நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆர்ஜேடி ஆதரவு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications