ஸ்புட்னிக் வி தடுப்பூசியை சீரம் தயாரிக்கலாம்.. இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை தற்போது வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனாலும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3223 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை குறைந்து வருவதால், தடுப்பூசி போடும் பணியை இந்தியா வேகப்படுத்தி உள்ளது. 2வது அலையைப் போல் 3வது அலையும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் மூன்றாவது அலை வருவதற்குள் தடுப்பூசியை இந்தியாவில் பல கோடி மக்களுக்கு விரைவாக செலுத்த வேண்டும் என்று அரசு விரும்புகிறது.

ஸ்புட்னிக் வி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இந்தியாவிலும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தைத் தவிரவும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி பல்வேறு இந்திய நிறுவனங்களுடன் செய்ய ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தடுப்பூசி தயாரிப்பு
இந்நிலையில் புனேவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகில் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமான சீரம் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. இந்த நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்து இருந்தது

ஒப்புதல்
சீரம் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து சீரம் நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. .

சீரம் செய்து வரும் பணிகள்
சீரம் நிறுவனம் ஏற்கனவே ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் தயாரித்து வருகிறது, ஜூன் மாதத்தில் 10 கோடி டோஸ் வழங்குவதாக அரசிடம் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் நோவாவாக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரிக்கிறது, அதற்கான ஒழுங்குமுறை அனுமதி பெற அமெரிக்காவிடம் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் வரிசையாக உலக நாடுகளுக்கு வரும். இப்போது ரஷயாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளதால் அந்த தடுப்பூசி டோசும் இனி அதிக அளவு இந்தியாவில் கிடைக்கும்.

92 சதவீதம் ஆற்றல்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி. உலகிலேயே முதல் தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்திருந்தது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சுமார் 92% வரை தடுப்பாற்றலை தருகிறது. அதேபோல ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்யக் குறைந்த செலவே ஆகும் என்கிறார்கள் மேலும், சாதாரண ஃப்ரிட்ஜ்யிலேயே சேமித்து வைக்கலாம் என்பதால், இந்தத் தடுப்பூசியை அதிகம் பயன்படுத்த முடியுமாம்.












Click it and Unblock the Notifications