பகவத் கீதையை பாடத்தில் அறிமுகம் செய்வதை வரவேற்கிறோம்.. செயல் ராவணன் மாதிரி இருக்கே: மணிஷ் சிசோடியா
டெல்லி: ‛‛பள்ளி பாடத்தில் பகவத்கீதையை அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை செய்பவர்கள் கீதையில் கூறிய கருத்துகளை கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் செயல் ராவணன் போன்று உள்ளது'' என டெல்லி மாநில ஆம்ஆத்மி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாஜகவை தாக்கி பேசினார்.
குஜராத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 2022-2023 கல்வியாண்டில் பகவத்கீதை பாடமாக சேர்க்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து குஜராத் கல்வித்துறை மந்திரி ஜிது வாகனி கூறுகையில், ‛‛பகவத் கீதையை அறிந்து கொள்ளவும்,மாணவர்களிடையே அது குறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்படுகிறது'' என்றார்.

குஜராத்தில் அறிமுகம்
மேலும் குஜராத் அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‛‛மாணவர்களின் முழு வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். இதனால் 6 முதல் 12ம் வகுப்புவரையிலான பாடத்திட்டத்தில் பகவத்கீதை பாடமாக இருக்கும். பாராயணம், கதைகள், பாடல்கள், நாடகங்கள், வகையில் பகவத்கீதை அறிமுகம் செய்யப்படும்'' என கூறப்பட்டு இருந்தது.

வரவேற்பு
குஜராத் பாஜக அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சியினர் வரவேற்றனர். அதேநேரத்தில் பகவத் கீதையில் இருந்து பாஜகவினரும் கற்று கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்தன. மேலும் இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை பதிவிடப்பட்டு வருகிறது.

ராவணன் போன்றவர்கள்...
இந்நிலையில் குஜராத் அரசின் நடவடிக்கையை டெல்லி துணை முதல்வரும், கல்வித்துறையை நிர்வகிப்பவருமான மணிஷ் சிசோடியா வரவேற்றுள்ளதோடு, விமர்சனமும் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பது நிச்சயமாக நல்ல முடிவு. ஆனால் பள்ளியில் பகவத்கீதையை அறிமுகம் செய்பவர்கள்(பாஜகவினர்) அதன் கருத்துகளை கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் செயல் ராவணனை போன்று உள்ள நிலையில் தான் பகவத்கீதை குறித்து பேசியுள்ளனர்.'' என்றார்.

கர்நாடகத்திலும் வாய்ப்பு
இதற்கிடையே, குஜராத்தை போல் கர்நாடக பள்ளிகளிலும் பகவத்கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் இன்று விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர், கர்நாடக பாடநூல்கழகத்தினர், கல்வி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications