இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருப்போம். பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதவராக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீனத்தில் இருந்து கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. காசா தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ளது.

இங்கு ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. இந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஆயுத மோதல் நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது.
இஸ்ரேல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படைகள் நடத்தியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டும் இன்றி கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்தது. இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது.
இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் பலியானதாகவும் 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இரு தரப்பும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: - இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடினமான சூழலை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம் என்று மோடி பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்தியா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications