ரபேல் ஒப்பந்தம் எப்படி செய்யப்பட்டது? என்ன நடந்தது? லோக் சபாவில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் பற்றி எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக் சபாவில் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முதல்நாள் ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். பாஜக மீதும், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு அவையிலேயே நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்தார். இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டது எப்படி என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஏன் செய்யப்பட்டது?
நாட்டின் பாதுகாப்பிற்காகவே ரபேல் விமானம் வாங்கப்பட்டது. இந்தியாவில் ராணுவ விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சீனா 400 புதிய விமானங்களை வாங்கி உள்ளது. பாகிஸ்தான் தனது பாதுகாப்பு பலத்தை இரட்டிப்பாக்கி உள்ளது. அண்டை நாடுகளின் ராணுவ பலம் அதிகம் ஆகியுள்ளது. அவசரத்திற்காகவே விமானம் வாங்க முடிவெடுத்தோம்.

போர் தேவை
போர் தேவைகளுக்காக விமானம் அவசரமாக தேவைப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை காங்கிரஸ் அரசு கருத்தில் கொள்ளவில்லை. 2001ல் வாஜ்பாய் அரசுதான் போர் விமானம் வாங்க கொள்கை அளவில் ஒப்பந்தம் அளித்தது. 2006ல் அனுமதி பெற்றும் காங்கிரஸ் விமானம் வாங்கவில்லை. 2014 வரை ரபேல் விமானம் வாங்காமல் காங்கிரஸ் காலம் தாழ்த்தியது.

காங்கிரஸ் மோசம்
காங்கிரஸ் அரசு 126 விமானங்களை வாங்காதது ஏன். எதிர்க்கட்சிகள் எனது விளக்கத்தை கேட்க தயாராக இல்லை. இது அவர்கள் இரக்கமில்லாமல் இருப்பதை காட்டுகிறது. ரபேல் உண்மைகளை கண்டு காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை.

செப்டம்பர் முதல்
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நமது நாட்டிலேயே ரபேல் உற்பத்தி செய்யப்படும். முதல் ரபேல் விமானம் செப்டம்பர் மாதம் இந்த வருடம் பறக்கும். 36 விமானங்களும் 2022க்குள் இந்தியாவிடம் வரும். யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம்.

டீலிங் பாதுகாப்பு
பாதுகாப்பு டீலிங்கிற்கும், டீலிங் பாதுகாப்பிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. நாங்கள் பாதுகாப்பு டீலிங்தான் செய்துள்ளோம். டீலிங்கை முடித்துவிட்டு பாதுகாப்பு பற்றி பேசவில்லை. எங்களுக்கு பாதுகாப்புதான் முக்கியம். இன்னும் 14 மாதங்களில் இந்தியாவின் பாதுகாப்பு பலம் அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications