சொந்த தொகுதியில் தோற்ற அரவிந்த் கெஜ்ரிவால்.. சைலண்டாக சம்பவம் செய்த காங்கிரஸ்! ஓ இதுதான் மேட்டரா
டெல்லி: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொந்த தொகுதியான புது டெல்லி தொகுதியில் தோல்வியடைந்ததற்கு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இடையிலான வாக்கு வித்தியாசம் சுமார் 3 ஆயிரமாக உள்ளது. அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக 47க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று, 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாகியுள்ளது.

ஊழல் எதிர்ப்பை மையமாக வைத்து உருவான ஆம் ஆத்மி கட்சி, அதே ஊழல் பிரச்சனையால் தலைநகர் டெல்லியில் ஆட்சியை இழந்திருக்கிறது. அதன் உச்சமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட புது டெல்லி தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்திருக்கிறார். 2013ஆம் ஆண்டு டெல்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் வென்றிருந்தார். அதன்பின் 2015 மற்றும் 2020 ஆகிய சட்டசபைத் தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவால் வென்றிருந்தார்.
ஆனால் 12 ஆண்டுகளில் தனது சொந்த தொகுதியான புது டெல்லியிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இந்த தோல்விக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டும், இஸ்லாமியர்களின் வாக்குகளும் காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் இந்த தோல்வியில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பங்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் பர்வேஷ் வர்மா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இடையிலான வாக்கு வித்தியாசம் 3,182 வாக்குகள் தான். ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட சந்தீப் தீட்ஷிக் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருக்கிறார். ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தால் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தோல்வியை அடைந்திருக்க மாட்டார் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications