டெல்லி சலோ.. தலைநகரை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்! தடுக்க தயார் நிலையில் மத்திய அரசு
சண்டிகர்: பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்திடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணியாக அணிவகுக்கின்றனர். இவர்களை தடுக்கும் நோக்கில் டெல்லியின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. டெல்லி மாநகரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் எந்த போராட்டத்தை திரும்பி கூட பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய விவசாயிகளின் போராடத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தது. விவசாயிகளின் உறுதியான போராட்டம் காரணமாக புதியதாக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் மத்திய அரசால் திரும்ப பெறப்பட்டன. பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று, அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றது இதுவே முதல் முறை.

தற்போது அதேபோன்றதொரு போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் பேரணி நடத்த உள்ளதாக ஏற்கெனவே அவர்கள் அறிவித்திருந்த நிலையில், நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதனையடுத்து, இன்று திட்டமிட்டவாறு விவசாயிகள் டெல்லியில் நுழைகின்றனர்.
இந்நிலையில், இந்த பேரணியை தடுக்கும் நோக்கில், மற்ற மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் அனைத்து எல்லைகளிலும் போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டிருக்கிறார்கள். மட்டுமல்லாது சிமெண்ட் தடுப்புகளை உருவாக்கியும், சாலையில் ஆணிகளை பதித்தும் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். மட்டுமல்லாது டிராக்டர் மூலம் விவசாயிகள் ஆற்று வழியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆற்று படுகையில் பெரிய பள்ளத்தையும் தோண்டியுள்ளனர்.
மட்டுமல்லாது மணல் மூட்டைகளை கொண்ட தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கு காவல்துறையினருடன், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் நடத்த உள்ள டிராக்டர் பேரணியில் 200க்கும் அதிகமான விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய முடியாதபடி தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications