டெல்லியில் 13 ஐஏஎஸ் பயிற்சி மையங்களுக்கு சீல்.. இரவோடு இரவாக அதிரடி காட்டிய அதிகாரிகள்!
டெல்லி: டெல்லியில் ஐஏஎஸ் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 2 மாணவிகள், ஒரு மாணவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கட்டுமான விதிகளை மீறி செயல்பட்டதாக இரவோடு இரவாக 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமும் பலத்த மழை பெய்தது. பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ஒரு கட்டிடத்தில் ஐஏஎஸ் தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிவில் சர்வீசஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அதன் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்து விட்டது.

அப்போது அங்கிருந்த பயிற்சி மாணவர்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவர், 2 மாணவிகள் பலியானார்கள் மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், டெல்லி போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். 7 மணி நேரத்துக்கு பிறகு தேடுதல் பணி நிறுத்திக்கொள்ளப்பட்டது. பலியான 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பலியானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ஷ்ரேயா யாதவ், தெலுங்கானாவை சேர்ந்த தன்யா சோனி, கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நவின் டால்வின் ஆகியோர் பலியானவர்கள் ஆவர். மேலும், ராஜிந்தர் நகர் போலீஸ் நிலையத்தில், பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், மரணம் விளைவிக்கும் குற்றம் இழைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.இதைத்தொடர்ந்து, பயிற்சி மைய உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி மையத்துக்கு எதிரே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, விதிகளை மீறி இயங்கி வரும் பயிற்சி மையங்கள் மீது டெல்லி மாநகராட்சி தனது நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
அடித்தளத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் பயிற்சி மையங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அடிதளத்தில் வகுப்பறைகள் அமைத்து இயங்கி வந்தது மற்றும் கட்டுமான விதிகளை மீறி செயல்பட்டதாக 13 பயிற்சி மையங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இரவோடு இரவாக அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications