ரிசல்ட் உற்சாகம்.. ஆனாலும் சோகத்தில் கெஜ்ரிவால்! இடைக்கால ஜாமீன் நீட்டிப்புக்கு நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் தற்போது சிறையில் உள்ளார்.
டெல்லி அரசின் 2021-2022ம் ஆண்டு மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீனோ, வேறு எந்த நிவாரணத்தையோ கோரவில்லை. மாறாக, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
விசாரணையில் "கெஜ்ரிவால் மீதான விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம். நாங்கள் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. வெறுமென பரிசீலிக்க இருக்கிறோம்" என்று கூறிய நீதிபதிகள், அடுத்தடுத்த விசாரணையின்போது கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
கடந்த மே மாதம் 10ம் தேதி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூன் 2ம் தேதி வரை ஜாமீனில் இருந்த கெஜ்ரிவால், அன்று மாலை சிறையில் சரணடைந்தார்.
இந்நிலையில் தனது இடைக்கால ஜாமீனை நீடிக்க கூறி தாக்கல் செய்த மனு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் அளிக்க முடியாது என்று கூறி மறுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications