கோர்ட்டிலேயே கைது.. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்.. அனுமதி கொடுத்தது டெல்லி நீதிமன்றம்!
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு தேர்தலையொட்டி உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார். விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், கெஜ்ரிவாலை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுக் கொள்கை வழக்கில் சிபிஐ இன்று கைது செய்தது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை இன்று சிபிஐ கைது செய்த நிலையில் 5 நாட்கள் காவலில் எடுக்கக் கோரியது சிபிஐ. அதற்கு 3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
ரிமாண்ட் காலத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை தினமும் 30 நிமிடங்களும், அவரது வழக்கறிஞரை தினமும் 30 நிமிடங்களும் சந்திக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்ததுள்ளது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் அவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் வீட்டு உணவுகளை எடுத்துச் செல்லவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிபிஐயால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பண மோசடி வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டாலும் சிபிஐ கைது செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து வர முடியாது என்பதால் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications