யூடர்ன்.. டெல்லி போலீஸ் அதிரடி முடிவு.. கோர்டில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் வழக்கில் இன்று என்ன நடக்கும்?
டெல்லி: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் இன்று பரிசீலிக்கிறது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த நிலையில், 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் உட்பட 7 வீராங்கனைகள் இவர் மீது பாலியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பினர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்தபோது வீரர்கள் அதை மறுத்துவிட்டனர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடியாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள்/வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த முறை அரசியல் அமைப்புகளின் ஆதரவை வீரர்கள் நாடினர். மேலும், விவசாய சங்கங்களும் வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இதனையடுத்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. இதில் ஒன்று போக்சோ வழக்காகும். ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒலிம்பிக் சங்கம் உட்பட பல அமைப்புகள் இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தன.
தொடர் போராட்டம் மற்றும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் கொடுத்த அழுத்தம் காரணமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் கடந்த 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படுவது கைவிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 15ம் தேதி டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் உரிய ஆதாரம் இல்லை என்றும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. தற்போது இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை நடத்த உள்ளது. டெல்லி போலீசின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமா அல்லது நிராகரிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications