சிபிஐயால் கைது செய்யப்பட்ட..டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா! சத்யேந்திர ஜெயினும் விலகல்
சிபிஐயால் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் பொறுப்பில் இருந்து மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும் இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தந்து.

மணிஷ் சிசோடியாவிடம் விசாரணை
மேலும் இதற்கு கைமாறாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சிபிஐ டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணையும் நடத்தியது.

அலுவலகத்தில் சிபிஐ சோதனை
அதன் தொடர்ச்சியாக டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமை செயலகத்தில் உள்ள மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியது. இதற்கு ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்தததோடு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்தது. இந்த மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் பெயரும் அடிபட்டது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது முன்னாள் ஆடிட்டர் புட்சிபாபு கோரண்ட்லா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிஷ் சிசோடியா கைது
இந்த வழக்கின் விசாரணையை தீவிரமாக நடத்தி வந்த சிபிஐ கடந்த 19 தேதி மணிஷ் சிசோடியாவிற்கு சம்மன் அனுப்பியது. எனினும் மணிஷ் சிசோடியா தரப்பில் ஆஜராவதற்கு அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து ஒருவாரம் சிபிஐ அவகாசம் வழங்கியது. இதையடுத்து, நேற்று முன் தினம் நேரில் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன் விடுத்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு மணிஷ் சிசோடியா சென்றார். அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர். முன்னதாக சிபிஐயின் நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிஷ் சிசோடியா ராஜினாமா
நேற்று மணிஷ் சிசோடியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. அதன்படி, மணிஷ் சிசோடியாவிடம் வரும் 4 ஆம் தேதி விசாரணை நடத்த சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதற்கு மத்தியில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் கோரி முறையிட்டப்பட்டது. ஆனால், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் பொறுப்பில் இருந்து மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார்.

சத்யேந்தர் ஜெயினும் ராஜினாமா
அதேபோல், ஊழல் புகாரில் கைதாகி திகார் சிறையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இருவரது ராஜினாமாவையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டுள்ளார். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 18 துறைகளை தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications