"படிப்பறிவு இல்லாத கட்சி பாஜக" - ஒரு தேசியக் கட்சி என்றும் பாராமல்.. பயங்கரமாக கலாய்த்த சிசோடியா
டெல்லி: "படிப்பறிவு இல்லாதவர்கள் உள்ள கட்சி பாஜக; எனவே நாட்டையும் கல்வி அறிவற்ற தேசமாக மாற்ற அதன் தலைமை முயற்சி செய்கிறது" என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மதுபானக் கொள்கையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஆளுநர் வி.கே. சக்சேனா குற்றம்சாட்டினார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, மணீஷ் சிசோடியா வீட்டில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், தான் எந்த தவறும் செய்யவில்லை என ஆரம்பம் முதலாகவே மணீஷ் சிசோடியா கூறி வருகிறார். மேலும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்து வரும் மக்கள் நலப்பணிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே மத்திய பாஜக அரசு இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) ஒரு விசாரணை நோட்டீஸை அரசுக்கு அனுப்பி இருந்தது. எனினும், அதற்கு டெல்லி ஆம் ஆத்மி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த அறிக்கைக்கு பதிலளிக்காததற்கு விளக்கம் அளிக்குமாறு டெல்லி அரசுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் கூறியதாவது:
படிப்பறிவு இல்லாதவர்கள் இருக்கும் கட்சி பாஜக. எனவே, நாட்டு மக்களையும் படிப்பறிவு இல்லாதவர்களாக மாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைமை விரும்புகிறது. அதனால்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுப் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. முதலில் அதுகுறித்து பாஜகவினர் விசாரணை நடத்தட்டும்.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் நற்பணிகள் பிடிக்காமல், அரசு மீது களங்கம் விளைவிப்பதற்காக மதுபானக் கொள்கையில் முறைகேடு என பாஜகவினர் கூறினார். இதுதொடர்பான என் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது பள்ளிக்கூட கட்டுமான விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.












Click it and Unblock the Notifications