பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தான் பயன்பட்டது மதுபான ஊழல் கேஸ்.. கெஜ்ரிவால் விடுதலை!
டெல்லி: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வகுத்த புதிய மதுபானக் கொள்கையில் சதித் திட்டம் அல்லது குற்றவியல் நோக்கம் இல்லை எனக் கூறி மாஜி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாகச் சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் காரணமாகவே கெஜ்ரிவால் தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்குக் கூட செல்ல முடியாமல் கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டி இருந்தது.

விடுதலை
இதற்கிடையே முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. "இந்தக் கலால் கொள்கையில் எந்தவொரு சதித்திட்டமோ அல்லது குற்றவியல் நோக்கமோ இல்லை," என்று நீதிமன்றம் தெரிவித்தது.
பின்னடைவு
சிபிஐக்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர் குல்தீப் சிங்கை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்த்த சிபிஐ அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிடவுள்ளது. சந்தேக நபர்களை மன்னித்து, அப்ரூவராக்கி சாட்சி பெற்ற சிபிஐ விசாரணை முறைக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு, ஆம் ஆத்மி கட்சித் தலைவருக்கும் அவரது உதவியாளருக்கும் ஆட்சியில் இருந்தபோது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. 2021-22ல் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த கொள்கை, முந்தைய மாடலை விட அதிக வருவாயைக் கொண்டுவரும் என ஆம் ஆத்மி கூறியது. இருப்பினும், சர்ச்சை பெரிதானதால் அது ரத்து செய்யப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், வலுவான ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது. வெறும் யூகத்தின் அடிப்படையிலேயே சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக ரவுஸ் அவென்யூ நீதிமன்றச் சிறப்பு நீதிபதி ஜிதேந்தர் சிங் குறிப்பிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேர் மீதும் முதற்கட்ட வழக்கு கூட உறுதியாக நிறுவப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆதாரங்கள் இல்லை
முக்கியமாக அப்ரூவர் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்ட விசாரணை முறையை நீதிமன்றம் ஆய்வு செய்தது. குற்றவாளிகளை மன்னித்து அப்ரூவராக்கி, அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் வழக்கில் ஓட்டைகளைச் சரிசெய்வது அல்லது மேலும் சந்தேக நபர்களைச் சேர்ப்பது தவறான அணுகுமுறை என நீதிமன்றம் கூறியது. இது அரசியலமைப்பு கோட்பாடுகளின் மீறல் என்றும் நீதிபதி விளக்கினார்.
ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த இந்த மதுபானக் கொள்கை வழக்கில் ஊழல் நடந்துள்ளது என்பதை வழக்கின் பிரதானக் குற்றச்சாட்டு. உரிமக் கட்டணங்களைக் குறைத்து, தனியார் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கும் வகையில் புதிய கொள்கை இருப்பதாகவும் இது அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியது. அப்போதைய டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆகஸ்ட் 2022இல் சிபிஐ முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தான் கெஜிர்வால் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீடு
இருப்பினும், இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மத்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. தங்கள் விசாரணையின் அம்சங்களை நீதிமன்றம் சரியாகக் கருத்தில் கொள்ளவில்லை என சிபிஐ வாதிடுகிறது.












Click it and Unblock the Notifications