டெல்லியை மொத்தமாக தூக்கும் பாஜக.. காங்கிரஸ் ஜீரோ.. டிவி நிறுவனம் தகவல்
டெல்லி: டெல்லி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தலைநகர் என்பதால் இந்த தேர்தல் தேசியளவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. இந்நிலையில் டிவி என்கிற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளனர். ஆம் ஆத்மி வலுவான எதிர்க்கட்சியாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளனர்.
தலைநகர் டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சியை பிடித்து காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு சவால் விடுத்தது. அதன்படி டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கிறது. அதிலும் 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தல்களில் ஆம் ஆத்மி தனிப்பெருபான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு இன்று (5.2.2025) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். மாலை 5 மணி நிலவரப்படி டெல்லியில் 57.7 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பெரும்பான்மை கிடைத்து ஆட்சியை பிடிக்க முடியும். இந்த தேர்தலை பொறுத்தவரை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 6.30 மணியில் இருந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எனப்படும் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் கணிப்பின்படி பாஜகவுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
சில நிறுவனங்கள் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் கூறி வருகின்றன. டிவி (DV) ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பிலும் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக 36-44 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 26-34 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஆம் ஆத்மி கடுமையான போட்டியளித்தாலும் அவர்களை விட அதிகமாக வெற்றி பெற்று பாஜக தலைநகரை கைப்பற்றும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications