இனி யாராலும் தொடக் கூட முடியாது.. டெல்லியை சுற்றி வருகிறது சுதர்சன் சக்ரா.. டாப் லெவல் திட்டம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் விஐபி-89 மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய IADWS எனப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை மத்திய அரசு களமிறக்கியுள்ளது. சுதர்ஷன் சக்ரா பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக இது களமிறக்கப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு அமைப்பு எப்படிச் செயல்படுகிறது.. இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் பல முக்கியமான பகுதிகள் உள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள விஐபி-89 மண்டலத்தில் விமானங்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு வான்வெளிப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட IADWS எனப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 5,181 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பாதுகாப்பு அமைப்பு, விஐபி 89இன் பாதுகாப்பை உறுதி செய்யும்.
பாதுகாப்பு அமைப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைத்துள்ள இந்த விமானப்படை சார்ந்த அமைப்பாகும். நாட்டின் தலைநகரைச் சுற்றி 30 கிமீ தொலைவுக்கு, நவீன வான்வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பல அடுக்கு பாதுகாப்பை இது வழங்கும்.. இதன் மூலம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகள் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.
உள்நாட்டுத் தொழில்நுட்பம்
ட்ரோன்கள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் போன்ற நவீன அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவே இது பயன்படும் என மூத்த அதிகாரி கூறியதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் விஐபி மண்டலங்களில் ரியல் டைம் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். நேற்று முன்தினம் திங்களன்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்புச் செலவினங்களில் இதுவும் அடங்கும். மேலும், இதுபோன்ற உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும்.
சுதர்ஷன் சக்ரா கட்டமைப்பிற்கு இணங்க ஒரு முன்னோடித் திட்டமாக இது இருக்கும் என அதிகாரிகள் விவரிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
சுதர்ஷன் சக்ரா
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி 'சுதர்ஷன் சக்ரா' என்ற பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்திருந்தார். இது தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும் பல அடுக்கு பாதுகாப்பு முயற்சியாகும். 2035ஆம் ஆண்டிற்குள் இந்தியாவுக்கு விரிவான பாதுகாப்புக் கவசத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். முக்கிய உள்கட்டமைப்பு, நகரங்கள் மற்றும் ராணுவத் தளங்களைப் பாதுகாப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
காரணம் என்ன!
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகே இந்த சுதர்ஷன் சக்ரா திட்டம் உருவாக்கப்பட்டது. அதாவது பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லியமான ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளைத் தாக்க முயன்றது. மே 7-8 இரவு முழுவதும் நடந்த பகை வான்வழி ஊடுருவல்களை இந்தியப் படைகள் வெற்றிகரமாக எதிர்கொண்டன.
வான் பாதுகாப்பு கட்டமைப்புகளால் இந்தியாவில் முக்கிய உள்கட்டமைப்பிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில், டெல்லி- என்சிஆர் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு விரிவான பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது டெல்லியில் இந்த பாதுகாப்பு அமைப்பு களமிறக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications