கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடையாது.. விசாரணை நீதிமன்றத்தை சாடிய டெல்லி ஹைகோர்ட்.. என்ன நடந்தது?
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு, கெஜ்ரிவாலின் விடுதலையை உடனடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஹைகோர்ட் மறுத்திருக்கிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலுக்கு தேர்தலையொட்டி உச்ச நீதிமன்றம் கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அதே நேரம் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு விசாரணையின் போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளுடன் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படவில்லை என அவருடைய வழக்கறிஞர் வாதிட்டார்.
விசாரணை முடிவில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம், கெஜ்ரிவாலை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலும் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீனை நிறுத்தி வைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், கெஜ்ரிவாலுக்கு அதில் நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மேல் முறையீட்டு வழக்கில், அதில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க விதித்த தடை தொடரும் என்று டெல்லி ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணை நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு தனது வாதத்தை முன்வைக்க போதிய வாய்ப்பை வழங்கவில்லை என்றும் கூறியுள்ள டெல்லி ஹைகோர்ட், விசாரணை நீதிமன்றம் சரிவர தீர்ப்பளிக்கவில்லை என்ற ரீதியில் காட்டமான கருத்தையும் வெளிப்படுத்தியது. அதாவது, விசாரணை நீதிமன்றம் didn't apply its mind- என்ற கருத்தினையும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications