ஹஜ் ஏற்பாட்டாளர்கள் குழுவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: ஹஜ் ஏற்பாட்டாளர்கள் குழுவுக்கு அளிக்கப்பட்ட பதிவு சான்றிதழை கடந்த மே 21 ஆம் தேதி மத்திய அரசு நிறுத்தி வைத்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி படைத்தவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கான கடமைகளில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் துல்ஹஜ் மாதத்தில் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கில் மக்கா நகரில் குவிவார்கள்.

இந்தியாவில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஹஜ் கமிட்டி மூலமாக செல்கின்றனர். அது மட்டும் இன்றி ஹஜ் கொள்கையின் படி சில தனியார் அமைப்புகளும் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் குழுவாக செயல்பட அரசு அனுமதி அளிக்கிறது. இந்த குழுக்களுக்கு தனியாக ஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது. இந்த குழுக்களின் மூலமாகவும் பதிவு செய்தும் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்த ஹஜ் பயண குழுக்கள் (HGO) அரசிடம் பதிவு சான்றிதழ் பெறுவதும் அவசியம். இந்த குழுக்களுக்கு கடந்த மே 18 ஆம் தேதி மத்திய அரசு பதிவு சான்றிதழும் அளித்து இருந்தது. எனினும், சில தவறான தகவல்களை அளித்ததாக மே 21 ஆம் தேதியே வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை தற்காலிமாக ரத்து செய்தது. இதற்கு எதிராக இந்தக் ஹஜ் குழுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, சந்திர தாரி சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த, ஹஜ் ஏற்பாட்டாளர் குழுக்களுக்கான பதிவு சான்றிதழையும் ஒதுக்கீட்டையும் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ஹஜ் ஏற்பாட்டளர் குழுக்களுக்கான பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டால், இந்த குழுக்களிடம் ஹஜ் செல்வதற்காக பதிவு செய்து இருந்த புனித பயணிகள் தங்கள் மத கடமையை நிறைவேற்ற இயலாமல் போகும்.
இது போன்ற நடவடிக்கை ஹஜ் கொள்கையின் நோக்கத்தை தோற்கடிக்கும் என்பதோடு, இந்திய அரசியலமைப்பின் 25 வது பிரிவை மீறும் வகையில் அமையும்" என்று தெரிவித்தது. அதே வேளையில், இந்த ஹஜ் பயண ஏற்பாட்டு குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசு தொடர்ந்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications