போதை மாஃபியா ஜாபர் சாதிக்கால் சிக்கும் அரசியல்வாதிகள், தமிழ் சினிமா பிரபலங்கள்! என்சிபி அதிகாரி பரபர
டெல்லி: அரசியல்வாதிகளுடனும் சினிமா பிரபலங்களுடனும் தனக்கு தொடர்பிருப்பதாக போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக டெல்லி என்சிபி அதிகாரி ஞானேஸ்வர் சிங் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஜெய்ப்பூரில் ஒரு பங்களாவில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை இன்று கைது செய்தோம். போதை பொருள் கடத்தலை தடுக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

டெல்லி, தமிழகம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவுக்கு போதை பொருட்களை கடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி போதை பொருள் வழக்கில் கைதான 3 பேரின் தகவலை அடுத்து ஜாபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று டெல்லியில் வைத்து ஜாபரை கைது செய்தோம்.
போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரின் எனும் போதை பொருட்களை ஜாபர் கடத்தியுள்ளார்.
போதை பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை வைத்து மங்கை என்ற படத்தை தயாரித்துள்ளார். உணவு பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். அரசியல் கட்சிகளுக்கு போதைக் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை ஜாபர் வழங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எங்கெல்லாம் பதுங்கல்: இதுவரை திருவனந்தபுரம், மும்பை ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்துள்ளார். போதை பொருள்களை கடத்தியதன் மூலம் சம்பாதித்த பணத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலை ஆரம்பித்துள்ளார். விசாரணைக்கு பிறகு ஜாபருடன் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடுவோம்.
சர்வதேச கும்பலுடனும் ஜாபருக்கு தொடர்பிருக்கிறது. தமிழகத்தில் சினிமா பிரமுகர்களுடனும் சாதிக்கிற்கு தொடர்பிருப்பதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் முழு பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரகுமான் ஆகும். இவ்வாறு ஞானேஸ்வர சிங் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் போதை பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15ஆம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக் குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
ரூ 2000 கோடி போதை பொருள் : அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 50 கிலோ வேதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ 2000 கோடியாகும். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரை திமுக தலைமை, கட்சியிலிருந்து உடனடியாக நிரந்தரமாக நீக்கியது.
டெல்லியில் கைது: இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அவர் ஜெய்ப்பூர் பங்களாவில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு போதை பொருள் தடுப்பு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications