டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி.. தீவிர சோதனையில்.. ஏடாகூடமாய் சிக்கிய இளைஞர்!
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக டெல்லியில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கார் சோதனையில் இளைஞர் ஒருவர் ஏடாகூடமாய் சிக்கியிருக்கும் சம்பவம் சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நவம்பர் 10ம் தேதி திங்கட்கிழமை மாலை 6:52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் எண்.1 வாயில் அருகே குண்டுவெடிப்பு நடந்தது. சம்பவத்தில் ஒரு ஹூண்டாய் i20 கார் வெடித்து சிதறியது. போக்குவரத்து சிக்னலில் கார் நின்றபோது இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

இந்த பயங்கரச் செயலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் டாக்டர் உமர் உன் நப், காரை ஓட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நேற்று காவலர்கள் வாகனங்களைச் சோதித்துக் கொண்டிருந்தபோது, சிவப்பு நிறம் கொண்ட கார் ஒன்றை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அந்த கார் குறித்த விவரங்களை போலீசார் சரிபார்க்க தொடங்கினர். சோதனைக்கு காரில் சென்றவர்களும் முழுமையாக ஒத்துழைத்தனர். திருமண விழாவை முடித்துக்கொண்டு திரும்புவதாக அவர்கள் கூறினர். இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக காரின் டிக்கியைச் சோதிக்க போலீசார் முடிவு செய்தனர். டிக்கியைத் திறந்ததும், உள்ளே இருந்த காட்சியைப் பார்த்து குடும்பத்தினரும், போலீசாரும் சிரிப்பில் மூழ்கினர்.
காரின் டிக்கியில் ஒருவர் இயர்போனில் பாட்டு கேட்டவாறு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். போலீசார் டிக்கியைத் திறந்த பின்னரும் அவர் விழிக்கவில்லை. பின்னர், அவரை எழுப்பியபோது, அவர் குழப்பத்துடன் விழித்து பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவாலாக ஷேராகி வருகிறது. வீடியோவுக்கான பதிவில், "டெல்லியின் சிக்னேச்சர் பாலத்தில் நடைபெற்ற வழக்கமான வாகனச் சோதனையின்போது, ஒரு காரின் டிக்கிக்குள் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்புவதாகவும், காரில் இடமில்லாததால் ஒருவர் டிக்கியில் படுத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி, சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
டெல்லி போலீசார் பொதுமக்களிடம் பயணத்தின்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளனர்" என்று அந்தப் பதிவில் உள்ளது. இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications