பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி!
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த தேவோஸ்மிதா பால் என்பவர், கிழக்கு டெல்லியில் அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலையில் ஈடுபட்ட தம்பதியை மேற்கு வங்கத்தில் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் தேவோஸ்மிதா பால் தனியாக வசித்து வந்தார். இப்படி இருக்கையில் கடந்த 4ம் தேதியன்று, அவர் தனது வீட்டில் தலை மற்றும் கைகளில் பலத்த காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இக்கொலை மொத்த டெல்லியையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி நியூ அசோக் நகர் காவல் நிலைய போலீஸார், தீவிர விசாரணையை மேற்கொண்டனர். பேராசிரியை தேவோஸ்மிதா பாலின் கணவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. டெல்லியில் உள்ள வீட்டில் அவர் தனியாகவே வசித்து வந்தார்.
சம்பவத்தன்று, அவரது சகோதரி தேவராதி பால் காலையிலிருந்து பலமுறை போன் செய்தும் தேவோஸ்மிதா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகோதரி நேராக அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தேவோஸ்மிதா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, தேவோஸ்மிதாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தேவோஸ்மிதா ஏதோ ஒரு கனமான பொருளால் தலையில் தாக்கப்பட்டு, கூர்மையான ஆயுதத்தால் கைகளில் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. வீட்டில் இருந்த நகைகளோ, விலையுயர்ந்த பொருட்களோ திருடப்படவில்லை என்பதால் இது கொள்ளைக்கான கொலை அல்ல என்பது உறுதியானது. அப்படியெனில் இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தேவோஸ்மிதாவின் வீட்டிற்குள் நுழைந்து, சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை உள்ளே இருந்துவிட்டு, பின்னர் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியேறிய அதிர்ச்சி வீடியோ காட்சிகள் கிடைத்தன. சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், கொலையாளிகள் டெல்லியிலிருந்து தப்பி ஓடியதை போலீஸார் கண்டறிந்தனர்.
டெல்லி போலீஸாரின் தனிப்படை விரைந்து சென்று, மேற்கு வங்காளத்தில் தலைமறைவாக இருந்த அந்த மர்ம தம்பதியை, அதாவது முகமூடி அணிந்து வந்த ஆண் மற்றும் பெண் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, கொலைக்கான உண்மையான காரணம் என்ன? பேராசிரியைக்கும் அவர்களுக்கும் இடையே என்ன தனிப்பட்ட பகை இருந்தது? என்பது குறித்து நியூ அசோக் நகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications