இது கொடுமை.. ஹரியானா அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் டெல்லி அமைச்சர்
டெல்லி: தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனிடையே அண்டை மாநிலமான ஹரியானா, டெல்லிக்கு கொடுக்க வேண்டிய நீரின் அளவை குறைத்துவிட்டதாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், ஹரியானாவை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி தொடங்கியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பல பகுதிகளில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவி வருகிறது. போதிய தண்ணீர் விநியோகமின்றி பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். டேங்கர் லாரிகளில் வரும் தண்ணீரை பொதுமக்கள் குடங்களுடன் கூட்டம் கூட்டமாக ஓடிச்சென்று தண்ணீருக்கு அடித்துக்கொள்ளும் நிலையையும் பார்க்க முடிகிறது.

டெல்லியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அண்டை மாநிலங்களான ஹரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு தண்ணீர் கொண்டு வர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் ஹரியானா மற்றும் இமாசல பிரதேசத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இருந்த போதிலும் டெல்லியின் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தபாடில்லை. ஹரியானா திறந்து விடும் தண்ணீர் போதுமானதாக இல்லை எனவும் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு இதை ஏற்கவில்லை.
இந்த நிலையில்தான் ஹரியானாவிடம் இருந்து கூடுதல் தண்ணீர் கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட டெல்லி ஆம் ஆத்மி அரசின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஆதிஷி முடிவு செய்துள்ளார். தெற்கு டெல்லியின் போகல் பகுதியில் ஆதிஷி இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த போராட்டத்தில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆதிஷியின் போராட்டம் வெற்றிபெறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அனுப்பியதாக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறினார். மேலும் அதிஷி கூறுகையில், "கடுமையான வெப்பம் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை டெல்லி எதிர்கொண்டுள்ளது. தாகத்தில் இருப்பவருக்கு தண்ணீர் வழங்குவது நமது கலாசாராம். டெல்லி அண்டை மாநிலங்களில் இருந்தே தண்ணீரை பெறுகிறது.
பக்கத்து மாநிலங்களில் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால், டெல்லிக்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை ஹரியானா குறைத்துவிட்டது. இரு மாநிலங்களிலும் வேறு வேறு கட்சிகளை கொண்ட அரசாங்கங்கள் இருந்தாலும் அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல" என்றார்.
முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கும் முன்பாக ஆதிஷி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். டெல்லிக்கு 613 எம்.ஜி.டி தண்ணீர் ஹரியானா வழங்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக 100 மில்லியன் கேலன்களே ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறது.
இதனால் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்" என்று ஆதிஷி குற்றம் சாட்டியிருந்தார். தலைநகர் டெல்லியில் தண்ணீர் கேட்டு ஆளும் கட்சியின் அமைச்சர் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கியிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications