14 முறை கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு! ஆண் நண்பரின் கொடூர டார்ச்சர்.. இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை கொண்டதற்கான காரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது.
அதிலும் பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்டும் பாலியல் குற்றங்கள் அதிகரித்தே வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
“என்ன மன்னிச்சிடும்மா.. கஷ்டமா இருக்கும்மா” - கலங்கடித்த உருக்கமான கடிதம் - நீட் தேர்வால் தற்கொலை!

டெல்லி
டெல்லியில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குக் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஃபோன்கால் ஒன்று வந்துள்ளது. ஜெய்த்பூரில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு ஜெய்த்பூரில் வீட்டில் பெண் ஒருவர் தூக்கிட்டு இருப்பதைக் கண்டனர்.

தற்கொலை
இதையடுத்து அந்த பெண் டெல்லி எய்மஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனையை அடையும் முன்னரே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போன் மற்றும் தூக்கிடப் பயன்படுத்தப்பட்ட ஸ்டூலையும் போலீசார் மீட்டனர்.

லிவ்-இன்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 33 வயதான அந்த பெண்ணுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இருந்ததும், இருப்பினும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 7-8 ஆண்டுகள் அந்த பெண் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பெண் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதத்தையும் போலீசார் கண்டறிந்தனர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் இருந்தன.

14 முறை கருக்கலைப்பு
அதில் சில ஆண்டுகளாக ஒருவருடன் ஒன்றாக லிவ்-இன் ரிலேஷனில் வாழ்ந்து வந்ததாகவும் அந்த நபர் திருணம் செய்து கொள்வதாகப் பல முறை தன்னுடன் உறவு கொண்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். அதில் பல முறை தான் கருவுற்றதாகவும் இருப்பினும் தன்னை வற்புறுத்தி சுமார் 14 முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் அந்த பெண் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

வழக்குப்பதிவு
இவை எல்லாம் நடந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த நபர் மறுத்ததால் எனக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் ஒருவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.