டெல்லி குண்டுவெடிப்பு.. 6 நாட்களுக்கு பிறகு.. மக்கள் பார்வைக்காக மீண்டும் செங்கோட்டை திறப்பு!
டெல்லி: நவ.10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து டெல்லி செங்கோட்டை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டிருக்கிறது.
செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த ஹுண்டாய் i20 ரக கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாட்டின் தலைநகரில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த சம்பவம் எப்படி நடந்தது? உளவுத்துறை போதுமான தகவல்கள் சேகரிக்க தவறிவிட்டதா? என்று பலகோணங்களில் கேள்விகள் எழுந்திருந்தன. மறுபுறம் டெல்லி செங்கோட்டை உடனடியாக மூடப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்திருந்தனர். இதனையடுத்து இன்று செங்கோட்டை மீண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதல் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பான விடுத்திருந்த அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் மாலை டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. உயிர்களை இழந்த அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைச்சரவை இரண்டு நிமிடங்கள் மௌனம் அனுசரித்தது.
அமைச்சரவையில் இது தொடர்பாக சில முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தேச விரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலை நாடு கண்டிருக்கிறது. இந்த கோழைத்தனமான செயலை அமைச்சரவை வெளிப்படையாகக் கண்டிக்கிறது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த மரியாதையை செலுத்தியதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தது. மேலும், காயமடைந்த அனைவரும் விரைந்து குணமடைய பிரார்த்தித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் மேற்கொண்ட உடனடி மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை அமைச்சரவை பாராட்டியது.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்தியது. உலகின் பல்வேறு அரசாங்கங்கள் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு வழங்கிய ஒற்றுமை மற்றும் ஆதரவு அறிக்கைகளுக்கு அமைச்சரவை தனது நன்றியை பதிவு செய்தது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்களை அடையாளம் கண்டு, தாமதமின்றி நீதியின் முன் நிறுத்த, மிகவும் அவசரத்துடனும், தொழில்முறை அணுகுமுறையுடனும் விசாரணையை மேற்கொள்ளுமாறு அமைச்சரவை உத்தரவிடுகிறது.
தேசப் பாதுகாப்பு மற்றும் அனைத்து இந்தியர்களின் உயிர்களையும் நலனையும் பாதுகாக்க அரசு உறுதியாக இருக்கும் என்று அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்தியது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications