தொகுதி மறுவரையறை.. நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி-க்கள்!
டெல்லி: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுகவினர் கருப்புக் கொடி ஏற்றி போராடி வரும் சூழலில், நாடாளுமன்றத்தில் எம்பிக்களும் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசியலமைப்பு திருத்தச் சட்ட மசோதா ஆகியவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த 3 நாட்களிலேயே இந்த மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேறினால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாநிலங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிகிறது. இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் திமுக தொண்டரின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றியதோடு, தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல் திமுக நிர்வாகிகளும் கருப்பு சட்டை அணிந்து போராடி வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் கருப்பு சட்டையுடனே திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள திமுக எம்பி-க்களும் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய போதே, இதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தின் தொடக்க நிலையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. மாலை 3 மணியளவில் பிரதமர் மோடி லோக்சபாவில் பேசவிருக்கும் சூழலில், தென் மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications