தொகுதி மறுவரையறை: வட மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்பு குரல்! பாஜகவுக்கு சிக்கல்
டெல்லி: மத்திய அரசின் தொகுதி மறுவரையறை, தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். எனவே, தென் மாநில முதலமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை தங்கள் மாநிலத்திற்கும் பாதிப்புதான் என்று கூறி, பஞ்சாப் மாநில அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும், ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவர்களும் தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், இதில் பஞ்சாப் மாநிலமும் இணைந்திருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சி, தொகுதி மறுவரையறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. "மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுவரையறை, பஞ்சாப் மாநிலத்திற்கு இழைக்கப்படும் துரோகம். பாஜகவிற்கு வாக்களிக்காததால் பஞ்சாபை வஞ்சிக்கும் செயல்பாடு. ஹிந்தி பேசும் மாநிலங்களை கொண்டு ஹிந்தி பேசாத மாநிலங்களை கட்டுப்படுத்தும் பாஜகவின் கேவலமான உள்நோக்கம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது" என அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல ராஜஸ்தான் காங்கிரஸும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மறுவரையறை மூலம் தங்கள் மாநிலத்திற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றாலும், தென் மாநிலங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க வேண்டும் என ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
"தொகுதி மறு வரையறையால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றாலும், தென்னிந்திய மாநிலங்கள் அவதிப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தென்னிந்திய மாநிலங்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை கேட்டு அதன்படி நடக்க வேண்டும்" என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications