லோக்சபா தேர்தல் முடிவுகள்.. இஸ்லாமிய வேட்பாளர்கள் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள்? விவரம் இதோ
டெல்லி: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இஸ்லாமிய வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிட்டார்கள்? எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள் என்கிற விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும், 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், கடும் போட்டி நிலவியது. இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் எத்தனை இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்கிற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 78 இஸ்லாமிய வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 15 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இரண்டு வேட்பாளர்கள் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறார்கள். ஒருவர் மேற்கு வங்கத்தின் பஹரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான். மற்றொருவர் அசாதுதீன் ஓவைசி.
கடந்த 1999ம் ஆண்டிலிருந்து 2024 வரை பஹரம்பூர் தொகுதியை காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சௌத்ரி கைப்பற்றி வைத்திருந்தார். ஆனால், இந்த தேர்தலில் யூசுப் பதான் இந்த தொகுதியை 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளார்.
அதேபோல ஹைதராபத் தொகுதியில் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். தோல்வியடைந்த பாஜக வேட்பாளரான மாதவி லதாவின் செயல்பாடுகள் கடுமையான விமரசனத்திற்கு உள்ளாகியிருந்தன.
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஹைதராபாத்தில் ஐதராபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் கலந்துகொண்டார். அப்போது, மசூதியை நோக்கி வில் அம்பை எய்வது போல் சைகை செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவின. மாதவி லதா மத வன்முறையை தூண்டுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பிரசாரத்தின்போது வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் யாரும் சாதி, மதம் உள்ளிட்ட எதையும் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதை மீறியது மட்டுமல்லாது, அனுமதியே பெறாமல் ராமநவமி பேரணி நடத்தி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட மாதவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
அதேபோல தேர்தல் நாளன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம், ஹிஜாப்பை கழற்ற சொல்லி கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இவை அனைத்தும் கடும் விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், தற்போது தோல்வியடைந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கைரானா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட 29 வயதான இக்ரா சவுத்ரி , பாஜகவின் பிரதீப் குமாரை 69,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல காஜிபூர் தொகுதியில் அப்சல் அன்சாரி வெற்றி பெற்றார். லடாக்கில், சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் அப்துல் ரஷித் ஷேக், சம்பாலில் ஜியா உர் ரஹ்மான், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் மியான் அல்தாப் அகமது, ஸ்ரீநகரில் அகா சையது ருஹுல்லா மெஹ்தி என இஸ்லாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications