திமுக அரசுடன் 'அரசியல் சாசன' போர்-உச்சநீதிமன்றத்தில் விரைவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை 'பதில் வெடி'?
டெல்லி: தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு 'அரசியல் சாசன' சரத்துகளின் அடுக்கடுக்கான பதில்களுடன் தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் தரப்பு மனுத் தாக்கல் செய்ய தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 198 பக்க குற்றச்சாட்டுகளுடன் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

இந்த விசாரணையின் போது, சட்டசபை நிறைவேற்றுகிற மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது; அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால், சட்டசபை அதை மீண்டும் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்; தமிழ்நாடு ஆளுநர் மீதான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என சரமாரியாக வெளுத்திருந்தது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை சந்திரசூட் பெஞ்ச். மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏற்கனவே நாகாலாந்து மாநிலத்தில் இதேபோல மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிட்டு சிக்கல்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டவர். இத்தகைய பின்னணியில் தற்போது தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும் முழு வீச்சில் எதிர்கொள்ள ஆளுநர் மாளிகை தயாராகிவிட்டதாம். ஆளுநருக்கான அரசியல் சாசன அதிகாரங்கள் தொடர்பான மிக மிக விரிவான நீண்ட பதில்களை அடுக்கடுக்கான வாதங்களுடன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பதில்கள் ஜரூராக தயாராகிக் கொண்டிருக்கிறதாம். அடுத்து வரும் நாட்களில் இந்த பதில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறதாம்.
அதாவது தமிழ்நாடு அரசு 198 பக்கங்களில் குற்றம் சாட்டிய ஒவ்வொரு மசோதா, ஒவ்வொரு கோப்பும் ஏன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை முழுமையாக விளக்கும் வகையில் ஆளுநர் மாளிகை பதில் தர ரெடியாகிறதாம். இதனால் வரும் 20-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது அனல் பறக்கும் வாதங்கள் நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications