ஸ்டாலின் நேரில் சென்றார்.. பிரதமர் மோடி எங்கே போனார்? - லோக்சபாவில் ஆ.ராசா சரமாரி கேள்வி!
திராவிட மாடலை பின்பற்றும் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக உள்ளது என மக்களவையில் ஆ.ராசா கூறியுள்ளார்.
டெல்லி : "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடியோ எந்த பாஜக அமைச்சரோ, நேரில் சென்று பார்க்கவில்லை." என லோக்சபாவில் பேசியுள்ளார் திமுக எம்.பி ஆ.ராசா.
கொரோனா பாதிப்பு சூழலை மத்திய பாஜக அரசு முறையாகக் கையாளவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக அடக்கம் செய்யப்படவில்லை என்றும் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, எதன் அடிப்படையில் அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பதாகக் கூறுகிறீர்கள்? என திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டத்தொடர்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை மக்களவையில் பதிலளித்துப் பேசினார். இன்று மாநிலங்களவையில் உரையாற்றினார் பிரதமர் மோடி அப்போது அதானியும் மோடியும் நண்பர்கள் எனக் கூறி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கமிட்டனர். அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.

ஆ.ராசா கேள்வி
இந்நிலையில், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கப்படவில்லை. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, எதன் அடிப்படையில் அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பதாகக் கூறுகிறீர்கள்? நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு எந்த விதமான வேலைவாய்ப்புகளும் வழங்காமல், நாட்டின் பாதுகாவலர்கள் என்று எப்படி சொல்ல முடிகிறது?" எனக் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் போனார்.. மோடி எங்கே?
மேலும் பேசிய ஆ.ராசா, "கொரோனா பாதிப்பு சூழலை மத்திய பாஜக அரசு முறையாகக் கையாளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எந்த பாஜக அமைச்சரோ, பிரதமர் மோடியோ நேரில் சென்று பார்க்கவில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக அடக்கம் செய்யப்படவில்லை." எனக் குற்றம்சாட்டினார்.

திராவிட மாடல்
மேலும் பேசிய அவர், "திராவிட மாடல் ஆட்சி உள்ள தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குஜராத் மாடல் ஆட்சியில் அம்மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு முன்னோடி
மேலும் பேசிய ஆ.ராசா, திராவிட மாடலை பின்பற்றும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு செய்யவில்லை. விவசாயிகயின் விளைபொருட்கள் இரட்டிப்பு விலையில் கொள்முதல் செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications