கொந்தளித்த டிஆர் பாலு.. “தகுதியே இல்ல” - மத்திய அமைச்சர் மீது மக்களவையில் அவேசம்! திமுக வெளிநடப்பு
டெல்லி: தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக திமுக எம்பிக்கள் பேசியபோது மத்திய அமைச்சர் குறுக்கிட்டதால் மக்களவையில் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்கள் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு மத்திய அரசு போதிய நிவாரண நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டி பேசினர்.

திமுக எம்பி ஆ.ராசா, தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசு நிதி வழங்குவது தொடர்பாக பதிலளிக்கவே இல்லை எனக் கூறி அவர், நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதை தொடர்ந்து பேசிய திமுக எம்பி டிஆர் பாலு, "நான் முதலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு டிசம்பர் முதல் வாரம் மற்றும் கடைசி வாரத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் கோரிக்கையை அவர் கேட்டார். அதே சமயம் இது வானிலை ஆய்வு மையத்தின் முழு தோல்வியாகும். காரணம், சென்னைக்கு முறையான வானிலை எச்சரிக்கை வரவில்லை. வானிலை ஆய்வு மைய கருவிகள் இன்னும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளது.

வானிலை எச்சரிக்கை விடுப்பதில் பரிதாபகரமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். உரிய வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்படாத காரணத்தால் வெள்ள பாதிப்பின்போது ஆயிரக்கணக்கான மக்கள் ரயிலில் நடுவழியில் சிக்கிக்கொண்டார்கள். 2 கோடி மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர்." என்று சொல்லும்போது எதிரே இருந்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டிஆர் பாலு, "என்ன சொல்ல வருகிறீங்கள். உக்காருங்கள். ஏன் குறுக்கிடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? சபாயநாயகர் அவர்களே.. இவர் ஏன் தலையிடுகிறார்? அவருக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று சொல்லித் தாருங்கள். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே இவருக்கு தகுதி கிடையாது. கீழே உட்காருங்கள். பொறுப்புள்ள மத்திய அமைச்சராக இருப்பதற்கும் உங்களுக்கு தகுதி கிடையாது." என்று ஆவேசமாக தெரிவித்தார்.

உடனே ஆத்திரமடைந்த பாஜக எம்பிக்கள், "ஒரு மத்திய அமைச்சரை பார்த்து எப்படி தகுதி இல்லாதவர் என்று சொல்லலாம்? உங்கள் ஆட்சிதான் தகுதியற்றது. காங்கிரஸ் தகுதியற்றது." என்று சொல்லி டிஆர் பாலுவுக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திமுக எம்பிக்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications