Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைகளை இறுகப் பிடியுங்க..ஈகோவை அழித்தொழியுங்க..'கபளீகர' பாஜக-'திமுக'வுக்கு மரண பயம் காட்டும் 'டெல்லி'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல், அசைக்கவே முடியாத பெரும் சக்தி என அரசியல் 'விளையாட்டரங்கில்' எந்த ஒரு கட்சியுமே கிடையாது என்பதை நெற்றிப் பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறது. அத்துடன் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் உதாசீனப்படுத்தவே கூடாது என்கிற வலிமையான பாடத்தையும் டெல்லி தேர்தல் முடிவுகள் ஆழமாக கற்பித்திருக்கிறது.

"தேர்தல் அரசியல் என்பது வெற்றிக்கானது மட்டுமே.. எப்படி வெல்கிறோம் என்பது எல்லாம் வேறு.. வெல்வதற்காக மட்டுமே தேர்தல் அரசியலில் நிற்கிறோம்.. வெற்றிதான் இலக்கு"

delhi election 2025 delhi election result 2025 2025 2025

-இப்படிச் சொன்னவர் வேறு யாருமில்லை.. 'அரசியல் சாணக்கியர்' என அனைத்து கட்சியினராலும் நம்பப்படுகிற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.

தங்களது தலைமையிலான கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் வாய்ப்பு கிடைத்தால், ஆதாயம் இருக்குமேயானால், அரசியல் அறுவடை உறுதி என்றால் அந்த கூட்டணியின் கழுத்தையே அறுத்து குழம்பாக்கிவிடுவது என்பதுதான் பாஜகவின் அரசியல்.. அப்படித்தான் அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை அழித்ததில் தொடங்கி மகாராஷ்டிராவில் பால்தாக்கரேவின் சிவசேனாவுக்கு பாலூற்றியது வரை பாஜகவின் அரசியல் பயணம் தொடருகிறது.

பாஜகவுக்கு இலக்கு ஒன்றுதான்.. அரசியல் வெற்றி மட்டும்தான்.. அதனால் எந்த எல்லைக்கும் சென்று அத்தனை விமர்சனங்களையும் குட்டுகளையும் எருவாக்கிக் கொண்டு அறுவடை செய்து கொண்டே இருக்கிறது.


அரசியல் திமிர்வாதத்தில் எதிர்க்கட்சிகள்

ஆனால் அந்தோ பரிதாபம்! பாஜகவை எதிர்க்கிறோம்.. எதிர்க்கிறோம்.. என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் 20-க்கும் மேற்பட்ட அரசியல் எதிர்க்கட்சிகளோ எத்தனையோ முறை மண்ணை கவ்வி, தோல்வி எனும் மண்ணையே விழுங்கி விழுங்கி மரத்துப் போன பின்னரும் கூட 'மீசையில் மண் ஒட்டவில்லையே' என மல்லாந்து படுத்துக் கொண்டு நேற்று வரை கூட கை பிடித்துக் கொண்டிருந்த சக பங்காளி கட்சி மீது தேர்தல் களத்தில் காறி உமிழ்ந்து கொண்டே இருக்கிறது.. ஆம் தேர்தலுக்கு முன்பு வரை 'நண்பேன்டா' என 'இந்தியா' கூட்டணியாக வலம் வருகிற இத்தனை எதிர்க்கட்சிகளும் தேர்தல் களம் என வந்தவுடன் 'ஈகோ' 'தன்னகங்காரம்' 'தன்முனைப்பு' 'அரசியல் திமிர்தனம்' என அத்தனையையும் ஒரு சேர முதுகில் மூட்டைகளாகக் கட்டிக் கொண்டு மூர்க்கமாக மோதிக் கொள்கின்றன.. இதன் விளைவு ஒவ்வொரு தேர்தல் களத்திலும் மூக்குடைபட்டு 'ரத்த வெள்ளத்தில்' செத்து செத்து மிதந்து கொண்டிருப்பதுதான் என்ற நிலைமையாகிவிட்டது!

ஈகோவால் தோற்றுப் போன ராகுலும் காங்கிரஸும்

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டுவிட்டது என்பது கடந்த 10 ஆண்டுகால தேர்தல் வரலாற்றின் அப்பட்டமான உண்மை. காங்கிரஸ் கட்சி தலைவர்களே அதிகபட்சம் 6 சீட் கிடைத்தாலே போதும் என சிங்கிள் டிஜிட் மனநிலையில்தான் இருந்தனர்; இத்தனை பரிதாபமான நிலையில் சிந்திக்கும் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி கட்சியுடன் கை கோர்ப்பதில் என்ன 'இழவு' 'ஈகோ' வந்து சேர்ந்தது.. உலகத்துக்கு எல்லாம் பாடம் நடத்தும் ராகுல் காந்திக்கு உள்ளூர் அரசியல் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லை என்பதுதான் டெல்லி தேர்தல் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்தியா கூட்டணியிலேயே இருக்கிற ஆம் ஆத்மியின் கரத்துடன் காங்கிரஸின் 'கைகள்' இணைந்திருந்தால் டெல்லி தேர்தல் களம் வேறாகி இருக்கும் என்பதைத்தானே பல தொகுதிகளின் வாக்கு விவரங்கள் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது...

உணருமா இந்தியா கூட்டணி கட்சிகள்

'இந்தியா' கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஏதோ ஒரு தொகுதியில் ஏதோ ஒரு வகையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் நிற்கக் கூடியவை என்பதை அந்த கட்சியின் பெருந்தலைகளான திமுக, காங்கிரஸ் மட்டுமல்ல.. கழுவுற மீனில் நழுவுகிற கதையாக இருக்கும் இடதுசாரிகளும் இன்னபிற கட்சிகளும் உணர்ந்தாக வேண்டிய தருணம்தான்..


இந்தியா கூட்டணிக்குள் வெட்டு குத்து

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் அடித்துக் கொண்டு சாகின்றன.. ஹரியானாவில் இரு கட்சிகளும் எதிரிகளாக குதறிக் கொண்டிருக்கின்றன.. மகாராஷ்டிராவில் காங்கிரஸும் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸும் யார் முதுகில் எப்போது குத்துவது என 'சம்பவத்துக்கு' காத்திருக்கின்றன.

கெஜ்ரிவால் ஆம் ஆத்மி பாணியில் திமுக

தமிழ்நாட்டில் திமுகவை விட்டு ஓடிப் போய்விடலாமா? அதிமுக பக்கம் போனால் இத்தனை சீட்டு பிளஸ் இத்தனை ..... என்கிற மனக் கணக்குடன் மண்டியிடவும் சில கட்சிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.. திமுக தலைமையும் கறாராக உடனிருப்போர் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளாமல், பெரிய அண்ணன் மேலாதிக்க மன்ப்பான்மையில்.. டெல்லி கெஜ்ரிவால், காங்கிரஸை உதறிய பாணியில் உறியடிக்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.. உறியடிக்கும் போட்டியில் ஒருவராக சென்று சாதித்துவிடவே முடியாது.. உடனிருப்போர் உற்சாகம் மட்டுமல்ல.. உடனிருப்போர் வியூகம் வகுத்து யூகமாக சொல்லும் டிப்ஸ்களும்தான் உறியடிக்க பேருதவியாக இருக்கும்.

பாடம் கற்குமா திமுகவும் இந்தியா கூட்டணியும்?

இதனை 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் உணர்ந்து கொண்டு சக தோழமை கட்சிகளின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு, ஈகோவை ஆழக்குழி தோண்டி புதைத்துவிட்டு தேர்தல் எனும் ஆடுகளத்துக்கு வராமல் போனால் கபளீகரம் செய்ய காத்திருக்கும் பாஜகவிடம் மண்ணை கவ்விக் கொண்டு ஓடித்தான் ஆக வேண்டும்.. இதனைத்தான் டெல்லி தேர்தல் களம் செவுளில் அறைந்து சொல்லி இருக்கிறது என்பதை டெல்லி மட்டுமல்ல தமிழ்நாட்டு திமுக தலைமையிலான கூட்டணியும் உணர்ந்தாக வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+