பழனிக்கு 'முருகன்' தந்த சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் என்னென்ன ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி?
டெல்லி: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.. இதில் ஈரோடு-பழனி ரயில் வழித்தடம், மொரப்பூர், தர்மபுரி வழித்தடத்திற்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ரயில்வே பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் பற்றி மாநிலங்கள் வாரியாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும் போது, பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடைசியாக ஒதுக்கப்பட்ட தொகை என்பது வெறும் ரூ.879 கோடி தான். அதைவிட தற்போது 7 மடங்கு அதிமான நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ரயில் வழித்தடத்தில் 98 சதவீதம் மின்மயமாகி உள்ளது. கேரளாவில் 100 சதவீதம் மின்மயம் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் அம்ரித் ரெயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. 654 ரயில்வே மேம்பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கினற்ன. தமிழ்நாடு ஜவுளித்தொழிலில் சிறந்து விளங்குவதால் அங்கு ரயில் நிலையங்களில் 213 உள்ளூர் தயாரிப்பு அரங்குகள் அமைத்திருக்கிறோம்.
திண்டிவனம் நகரி, ஈரோடு - பழநி, மதுரை- அருப்புக்கோட்டை-தூத்துக்குடி, மொரப்பூா்-தருமபுரி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டங்களுக்கும் கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். இதுதவிர திருச்சி- நாகூா்- காரைக்கால், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் மீட்டா்கேஜ் பாதைகள் அகலப்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.150 கோடி ஒதுக்கி உள்ளோம்.
2024-25 பட்ஜெட்டில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை ரூ.12,173 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ரயில் வழித்தடம் அமைக்க ரூ.976 கோடி செய்யப்பட்டிருக்கிறது. தண்டவாளம் அகலப்படுத்த ரூ.413 கோடி செய்யப்பட்டிருக்கிறது. இரட்டை ரயில் பாதைக்கு ரூ.2,214 கோடியும் தண்டவாளம் மறுசீரமைப்பு ரூ.1,240 கோடி, சிக்னல் - தொலைதொடா்புக்கு ரூ.510 கோடி, மின்மயமாக்கலுக்கு ரூ.111 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியில் குறிப்பிட்டார்.
இதனிடையே செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், தமிழ்நாட்டில் புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்க திட்டம் உள்ளதா? என கேட்டார்கள். இதற்கு, “புதிய மண்டலமோ, கோட்டமோ உருவாக்கும் திட்டம் இல்லை. அது ஒரு விஷயமே இல்லை. ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்படுகிறது? என்பதையே பார்க்க வேண்டும். முந்தைய ஆட்சியைவிட அதிகமாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஒடிசாவுக்கு ரூ.10,536 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.9,138 கோடியும், கர்நாடகத்துக்கு ரூ.7,524 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவுக்கு ரூ.5,071 கோடியும், கேரளாவுக்கு ரூ.2,744 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு ரயில்வேயில் வழித்தடம் வாரியாக ஒதுக்கப்படட் நிதி:
புதிய ரயில் வழித்தடம் நிதி
அங்கமாலி-சபரிமலை (116 கி.மீ.) ரூ.100 கோடி
திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ.) ரூ.350 கோடி
ஈரோடு-பழநி (91.05 கி.மீ.) ரூ.100 கோடி
மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடி (143.5 கி.மீ.) 100.10 கோடி
மொரப்பூா்-தருமபுரி (36 கி.மீ.) 115 கோடி தமிழகத்தில் இரட்டை ரயில் வழித்தடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி
திருவனந்தபுரம்-கன்னியாகுமரி ரூ.365 கோடி
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி ரூ.150 கோடி
மணியாச்சி-நாகா்கோவில் ரூ.116 கோடி
சென்னை கடற்கரை-எழும்பூா் ரூ.150 கோடி
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் பழனி ஈரோடு வழித்தடத்திற்கான நிதி 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சராக உள்ள முருகன் தாராபுரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டார். தோல்வி அடைந்த போதிலும் அந்த தொகுதியில் ரயில் பாதைக்கு அதிக நிதி கொடுக்க வலியுறுத்துவேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் பழனி-தாராபுரம்-ஈரோடு வழித்தடத்திற்கு முதல்முறையாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் தென்மாவட்டங்களின் பொருளாதார வழித்தடமான மதுரை-அருப்புக்கோட்டை-தூத்துக்குடிக்கு (143.5 கி.மீ.) 100.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மக்களின் கனவான மொரப்பூா்-தருமபுரி (36 கி.மீ.) திட்டத்திற்கு 115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications