ஒரு ரூபாய் செய்ய ஒரு ரூபாயை விட அதிகம் செலவு.. அப்போ ரூ.2, ரூ.5 செய்ய எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
டெல்லி: பேருந்தில் போகும் போது சில்லறை கிடைக்காமல் நம்மில் பலரும் சிரமத்தைச் சந்தித்து இருப்போம். சில நேரங்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறையை வாங்காமல் கூட வந்திருப்போம். ஆனால், நமது நாட்டில் ஒரு ரூபாயைத் தயார் செய்ய அதன் மதிப்பு, அதாவது ஒரு ரூபாயை விட அதிகம் செலவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்..
நமது நாட்டில் ரூபாய் என்பது நோட்டுகளாகவும் காயின்களாகவும் புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாகச் சில்லறைக்கு எல்லாம் காயின் தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் காயின்கள் புழக்கத்தில் உள்ளன. இதற்கிடையே ஒரு ரூபாயைத் தயார் செய்ய எவ்வளவு செலவாகிறது என்பது குறித்த தகவல்கள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கூகுள்: அதாவது கூகுள் நிறுவனம் இப்போது கூகுளின் கூகிள்ஸ் என்ற பெயரில் ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இதில் நெட்டிசன்கள் பொது அறிவு சார்ந்த கேள்விகளைக் கேட்க வேண்டும். அதற்கேற்ப பரிசுகள் வழங்கப்படும் என்பதே இதன் நோக்கமாகும். அதில் யூசர் ஒருவர் ஒரு ரூபாய் காயினை செய்ய எவ்வளவு செலவாகிறது என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கான பதிலைக் கூகுள் அளித்த நிலையில், அதுவே இப்போது டிரெண்டாகி வருகிறது.
எவ்வளவு செலவு: நமது நாட்டில் ஒரு ரூபாயைத் தயாரிக்க அதன் மதிப்பை விட அதிகம் செலவாகிறது. அதாவது ஒரு ரூபாயைத் தயாரிக்க ஒரு ரூபாயைக் காட்டிலும் கூடுதலாகச் செலவாவதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018இல் இது தொடர்பான ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசே பதிலளித்த நிலையில், அதை மேற்கோள்காட்டியே இந்த பதில் தரப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் காயின் புழக்கத்தில் இருக்கிறது. துருப்பிடிக்காத எஃகு மூலம் இந்த ஒரு ரூபாய் காயின் தயாரிக்கப்படுகிறது. ஒரு ரூபாய் நாணயம் 21.93 மிமீ விட்டம், 1.45 மிமீ தடிமன் மற்றும் 3.76 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. இப்போது ஒரு ரூபாய் காயினை தயாரிக்க 1.11 ரூபாய் ஆவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற காயின்கள்: ஒரு ரூபாய் காயினுக்கு மட்டுமே அதன் மதிப்பை காட்டிலும் அதிகம் செலவாகிறது. அதேநேரம் மற்ற காயின்களுக்கு அதன் மதிப்பைக் காட்டிலும் குறைவாகவே செலவாகிறது. அதன்படி 2 ரூபாய் காயின் செய்ய ரூ.1.28 செலவாகும் நிலையில், 5 ரூபாய் காயின் செய்ய ரூ.3.69 செலவாகிறது. அதேபோல 10 ரூபாய் காயினை செய்ய ரூ.5.54 செலவாகிறது.
நமது நாட்டில் பயன்படுத்தப்படும் காயின்கள் அனைத்தும் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரசு நாணயக் கழகத்தால் அச்சிடப்படுகின்றன. ஆர்டிஐ கேள்விக்கு ஹைதராபாத் மின்ட் உற்பத்தி செலவுகளை வெளியிட்டது, அதேநேரம் ஆனால் மும்பை மின்ட் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(1)(d)இன் கீழ் ரகசியத்தன்மையைக் காரணம் காட்டி பதில் அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016- 17 நிதியாண்டில் மட்டும் 2.201 பில்லியன் நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அது அதற்கு முந்தைய ஆண்டில் தயாரிக்கப்பட்ட 2.151 பில்லியன் நாணயங்களை விடச் சற்றே அதிகமாகும்.
அதிகம்: இவை எல்லாம் கடந்த 2018இன் டேட்டா. ரூ. 20 காயின் என்பது 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பது குறித்த டேட்டா நம்மிடம் இல்லை. மேலும், இந்த ஆர்டிஐ பதில் வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பணவீக்கமும் கணிசமாக உயர்ந்துவிட்டது. எனவே, இப்போது நாணயத்தை அச்சிடுவதற்கான செலவு கணிசமாக அதிகரித்து இருக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications