டெல்லியில் தமிழ்நாட்டுச் செங்கோல்.. நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலின் கதை தெரியுமா?
டெல்லி : புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக, 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழ்நாட்டில் இருந்து நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செங்கோல் உருவான கதை தெரியுமா?
வரும் மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோல் நிறுவப்பட உள்ளது.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக வழங்கப்பட்ட இந்தச் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
செங்கோல் : தமிழ் மன்னர்களின் ஆட்சியில், குறிப்பாக சோழ மன்னர்கள் ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியது செங்கோல். அதிகார மாற்றத்தைக் குறிக்கும் வகையில், புதிய மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது செங்கோல் ஒப்படைக்கப்படும். இப்போதும், அரசியல் கூட்டங்களில் செங்கோல் வழங்கப்படுவதுண்டு.
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செங்கோலின் வரலாற்றைப் பார்க்கலாம்.. இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்த நிலையில், இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பாக ஜவஜர்லால் நேருவை அழைத்து, இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது? என்று கேட்டுள்ளார்.
ஆலோசித்த நேரு : இதையடுத்து நேரு, ராஜாஜியிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். அப்போது ராஜாஜி, தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார். அதேபோல நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல் பெற்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதை அடையாளப்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார்.
அந்த யோசனையை ஏற்றுக்கொண்ட நேரு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி இந்தியாவின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20வது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்புகொண்ட ராஜாஜி, இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான புண்ணிய சடங்குகளை செய்துதருமாறும், செங்கோலை நீங்கள் தான் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு வாய்ந்த செங்கோல் : அந்த சமயத்தில் ஆதீனம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையிலும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய அந்த நிகழ்வை செய்ய அவர் முன்வந்தார். அதற்காக சென்னையில் பிரபலமான நகைக்கடையான உம்மிடி பங்காரு செட்டி அண்ட் சன்ஸ் நகைக்கடையில் சைவ சின்னம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் ஒன்று தயாரிக்கப்பட்டது.
தான் காய்ச்சலில் அவதிப்பட்டதால், தனக்கு பதிலாக ஆதீனத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரானை, ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வானுடன் டெல்லிக்கு அனுப்பினார் அம்பலவாண தேசிகர். அவர்கள் விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிகார மாற்றம் : 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில், சுதந்திரம் பெறுவதற்கான நிகழ்வு டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடந்தது. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, சுதந்திர போராட்ட தியாகிகள், உயர் அதிகாரிகள் பலரும் இருந்தபோது திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் 11 பாடல்களையும், ஓதுவாமூர்த்திகள் பாடினர். பின்னர், மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் அந்தச் செங்கோலை, தம்பிரான் சுவாமிகள் கொடுத்துப் பெற்றார்.

பின்னர் அதன் மீது புனித நீர் தெளித்து ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். அப்போது டி.என் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் முழங்க, நேருவிற்கு திருநீறும், சந்தனமாலையும் அணிவிக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன மடத்தில், ஜவஹர்லால் நேருவிடம், இளைய ஆதினம் செங்கோலை ஒப்படைக்கும் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications