"மோடி அரசியலை நான் அழிக்க மாட்டேன்.!" பரபரப்பை கிளப்பிய டிரம்ப் வீடியோ.. வெளியுறவு துறை ரெஸ்பான்ஸ்
டெல்லி: பிரதமர் மோடியின் நற்பெயரைக் காலி செய்யத் தான் விரும்பவில்லை என்று டிரம்ப் சொல்லும் வீடியோ கடந்த சில நாட்களாகவே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மோடி மீது அன்பு இருந்தாலும் கூட அவரது அரசியலைத் தான் காலி செய்ய விரும்பவில்லை என டிரம்ப் சொல்கிறார். இதற்கிடையே மத்திய வெளியுறவு அமைச்சகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் கடந்தாண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அது மெல்லத் தொடர்ந்து சீராகி வருகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி குறித்து டிரம்ப் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

வெளியுறவு அமைச்சகம்
அதில் பிரதமர் மோடியின் அரசியல் எதிர்காலத்தை தான் நாசம் செய்ய மாட்டேன் என்று ட்ரம்ப் கூறுகிறார். அந்த வீடியோ கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.. இதற்கிடையே வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
அதாவது கடந்த சில நாட்களாகவே இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வந்தது. அதில் பிரதமர் மோடியை டிரம்ப் மிரட்டுகிறார் என்று நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வந்தனர். ஆனால், உண்மையில் டிரம்ப் விளையாட்டிற்காகவே அப்படிச் சொல்வதாக இன்னொரு தரப்பினர் கூறி வந்தனர். இந்தச் சூழலில் தான் வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அந்த வீடியோவை தான் இன்னும் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அவர் மேலும், "அப்படி ஒரு வீடியோ இருக்குமானால், அது உண்மையோ பொய்யோ, நாங்கள் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
டிரம்ப் வீடியோ
இதற்கிடையே ட்ரம்ப் அந்தக் கருத்துகள் எப்போது, எந்தச் சூழ்நிலையில் கூறினார் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்கா- இந்தியா வர்த்தக உறவுகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான பதற்றமான சூழலில், கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தான் அவர் இந்தக் கருத்துகளைக் கூறினார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா அமெரிக்காவுக்கு உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டாலும், இந்தியா இதை மறுத்தது.
என்ன சொன்னார்
அப்போது மோடியை "சிறந்த மனிதர்" என்றும் "மிகச் சிறந்த தலைவர்" என்றும் ட்ரம்ப் பாராட்டினார். மேலும், மோடிக்குத் தன்னை மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். மோடி மீது பரஸ்பர அன்பு இருந்தாலும் மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்கத் தாம் விரும்பவில்லை எனவும் கூறினார். தனது வழக்கமான சிரிப்புடன் டிரம்ப், "மோடி ஒரு சிறந்த மனிதர். அவருக்கு என் மீது அன்பு உண்டு... எனக்கும் அவர் மீது பரஸ்பர அன்பு இருக்கிறது. ஆனால், அவரது அரசியல் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை" என்று கூறினார்.
இந்தியா அமெரிக்கா உறவு
பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்து இருந்த நிலையில், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்த கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அப்போது தான் இரு நாடுகளின் உறவுகள் சீரடையத் தொடங்கின.
கடந்தாண்டு இந்தியா மீது டிரம்ப் வரியை விதித்தது முதல் இரு நாட்டு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நீண்ட பேச்சுவார்த்தை முயற்சிக்கு பிறகே இது சீராகத் தொடங்கியது. இப்போது இரு நாடுகளும் ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ட்ரம்ப் இந்தியப் பொருட்கள் மீதான வரிகளை 50%இல் இருந்து 18% ஆகக் குறைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications