எல்கே அத்வானிக்கு உடல்நலக்குறைவு.. அப்போலா மருத்துவமனையில் அனுமதி.. என்ன பிரச்சனை?
டெல்லி: பாஜக மூத்த தலைவரான எல்கே அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தொடக்கத்தில் அப்போலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் எல்கே அத்வானி. முன்னாள் பாஜக தேசிய தலைவரான இவர் துணை பிரதமராக பதவி வகித்தவர். பாஜக வளர மிக முக்கிய காரணமாக இருந்த தலைவர்களில் இவர் முக்கியமானவர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் ரத யாத்திரையை அத்வானி தான் தலைமையேற்ற நடத்தினார்.

அதன்பிறகு தான் பாஜக வேகமாக வளர தொடங்கியது. அதுமட்டுமின்றி பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 2002 முதல் 2004 ம் ஆண்டு வரை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.
எல்கே அத்வானிக்கு கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவில் சீட் வழங்கப்படவில்லை. வயது முதிர்வை காரணம் காட்டி பாஜக மேலிடம் சீட் வழங்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து எல்கே அத்வானி ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு 96 வயது ஆகிறது. சமீபத்தில் அவருக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வீடு தேடி சென்று பாரத ரத்னா விருது வழங்கினார்.
எல்கே அத்வானி தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக அவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று எல்கே அத்வானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது எல்கே அத்வானி எந்த வகையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தற்போது வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் எல்கே அத்வானியின் உடல்நலனை நரம்பியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் வினித் சூரியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்காணித்து சிகிச்சை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த மாதம் எல்கே அத்வானி உடல்நலக்குறைவால் இதே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பினார். அதற்கு முன்பாக அவர் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் தற்போது இன்று அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் எல்கே அத்வானி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது எல்கே அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவரை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே தான் எல்கே அத்வானி விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications