அலறிய DJ மியூசிக்! மணமேடையிலேயே நெஞ்சை பிடித்து சரிந்த இளைஞர்.. திருமணமான கொஞ்ச நேரத்தில் சோகம்
திருமண விழாவில் திடீரென சரிந்து மணமகன் உயிரிழந்தார்.
டெல்லி: திருமண விழாவில் நன்றாக இருந்த மணமகன் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீப காலங்களாகவே இளைஞர்கள் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலியாகும் சம்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். எந்தவொரு உடல்நிலை பாதிப்பு இல்லாதவர்களுக்கும் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.
கடந்த 15 நாட்களில் மட்டும் இதுபோல 5க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ள நிலையில், இதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

பீகார்
இந்த முறை பீகார் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்தாக தெரிகிறது. அப்போது அங்கு நடக்கவிருந்த திருமண விழா துக்க வீடாக மாறியது. பீகாரின் சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள இந்தர்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன காரணம்
சீதாமர்ஹியில் உள்ள மணிந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார்.. 22 வயதே ஆன இவருக்குப் புதன்கிழமை அருகே இருக்கும் இந்தர்வா கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது. அங்கு அப்போது அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மணமகனைத் தவிர.. அவரது முகம் இருக்கமாகவே இருந்தது. அங்குத் திருமணத்திற்காக டிஜே இசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உரத்த சத்தத்தில் பாடல்களை இசைக்கத் தொடங்கியதால்.. மணமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இதனால் பாடல்களை நிறுத்துமாறு அவர் பல முறை சொல்லியுள்ளார். குறைந்தது சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

துக்க வீடாக மாறிய திருமணம்
இருப்பினும் டிஜே இசைக்கு அங்குப் பலரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். இதனால் மணமகன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான், அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மேடையிலேயே சரிந்தார். இதையடுத்து பதறியடித்துக் கொண்டு அவரே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சில நிமிடங்களில் உற்சாகமாக இருந்த திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்டது.

அதிக சத்தம்
திருமணம் என்று இல்லாமல்.. பொதுவாகவே அதிக ஒலி இருக்கும் பாடல்களைத் தவிர்க்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பகல் நேரத்தில் 55 டெசிபல்.. இரவு நேரத்தில் 45 டெசிபல் சத்தத்தை விட அதிகமாக இறுக்கக் கூடாது என்று மாசுக் கட்டுப்பாடு வாரியம் பல முறை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும், இதை யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அதிக ஒலி என்பது பலருக்கும் படபடப்பு அழுத்தத்தைத் தரும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வல்லுநர்கள்
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "நாங்கள் அளித்திருக்கும்] பரிந்துரையைக் காட்டிலும் அதிக ஒலியைக் கேட்கத் தொடங்கும் போது பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. காதுகுழலில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. மேலும், சிலருக்கு இதய பிரச்சனைகள், தூக்கமின்மை மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்துகிறது. இருப்பினும், இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதுவே பிரச்சினை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

திடீர் சம்பவங்கள்
நமது நாட்டில் சமீப காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதாவது நல்ல நிலையில் இருப்பவர்கள் இப்படி திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலங்கானாவில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்தார். அதேபோல அங்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த காவலரும் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதுபோல ஓரிரு வாரங்களில் மட்டும் பல சம்பவங்கள் நடந்துள்ளன.












Click it and Unblock the Notifications