CJP-க்கு அடுத்து புதிதாக 'E20 ஜனதா கட்சி’.. நிதின் கட்கரிக்கு குறி.. நொடிக்கு நொடி எகிறும் ஆதரவு!
டெல்லி: மத்திய பாஜக அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 'E20 ஜனதா கட்சி' என்ற புதிய இயக்கம் உருவாகியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உருவான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
E20 ஜனதா கட்சியினர், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த E20 ஜனதா கட்சிக்கு நிமிடத்துக்கு நிமிடம் ஆதரவு அதிகரித்து வருகிறது.

எத்தனால் கொள்கை
மத்திய பாஜக அரசு, எத்தனால் கொள்கையை நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கரும்பு, மக்காச்சோளம், அரிசி கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலுடன் குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து வழங்குவதுதான் மத்திய அரசின் EPP கொள்கை. அதன்படி பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது 2013-14 ஆம் ஆண்டில் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. தற்போது 2025-26-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் பயன்பாட்டின் மூலமான கார்பன் உமிழ்வு அதிகமாக இருக்கும். எத்தனால் கலந்த பெட்ரோல், இந்த கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது என்பது மத்திய அரசின் வாதம். மேலும், எத்தனால் உற்பத்தியால் கரும்பு மற்றும் மக்காச்சோளத்திற்கு மாற்றுச் சந்தை உருவாகிறது. இது விவசாயிகளின் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறது எனக் கூறுகிறது மத்திய அரசு.
E20 திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலில் 200 மி.லி எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கிறது.
எதிர்ப்பாளர்கள் விமர்சனம்
அதேசமயம், எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் பழைய வாகனங்களின் மைலேஜ் குறைகிறது, வாகனங்களில் என்ஜின் பாகங்களில் அதிக தேய்மானம் ஏற்படுகிறது என்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டு. 20% எத்தனால் கலந்த பெட்ரோலை மட்டுமே வாங்க வேண்டும் என நிர்பந்திக்காமல் குறைந்த அளவிலான எத்தனால் கலந்த பெட்ரோலை வாங்குவதற்கு நுகர்வோருக்கு சுதந்திரம் தேவை என்ற குரல் வலுத்துள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக மகாராஷ்டிராவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளை அவரது மகன்கள் நிர்வகித்து வருகின்றனர். எத்தனால் உற்பத்தித் தொழிலில் நிதின் கட்கரி மகன்கள் ஈடுபட்டு வருவதால் அவர்களின் லாபத்திற்காகவே இந்த எத்தனால் கொள்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
E20 ஜனதா கட்சி
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து E20 ஜனதா கட்சி என்ற அமைப்பு உருவாகியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். அதனை முன் மாதிரியாக வைத்து எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் கட்டாயம் ஆக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் E20 ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் இக்கட்சியின் அக்கவுண்டுக்கு குறுகிய காலத்தில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் வந்துள்ளனர். அதேபோல, இன்ஸ்டாகிராமில் இந்த E20 ஜனதா கட்சியின் பக்கத்துக்கு அதற்குள் 3.82 லட்சம் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். நிமிடத்துக்கு நிமிடம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நிதின் கட்கரி பதவி விலக கோரிக்கை
E20 ஜனதா கட்சி மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி டாக்ஸி மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் சங்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 4 அன்று நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்துக்கு பணிந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். அடுத்ததாக, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஹர்தீப் சிங் பூரி ஆகியோரின் ராஜினாமாவை வலியுறுத்தி இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
